Chennai: நெடுஞ்சாலை ஒப்பந்தங்களை வழங்குவதில், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக, முதலமைச்சர் மீது தி.மு.க அளித்த புகாருக்கு நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்பு துறைக்கு உத்தரவிடுமாறு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க மனு தாக்கல் செய்துள்ளது.
தி.மு.கவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்த மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்து துறையை தன் வசம் வைத்திருக்கும் முதலமைச்சர், 5 நெடுஞ்சாலை பணிகளையும், பராமரிப்பையும் தனது உறவினர்களுக்கும் ,பினாமிக்கு கொடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 3,500 கோடி ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவினாசிபாளையம் நெடுஞ்சாலை திட்டத்துக்கான செலவு முதலில் 713 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பின்னர் 1,515 கோடியாக அதிகரிக்கப்பட்டத்தையும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இந்த திட்டத்துக்கான ஒப்பந்தம், ஈரோட்டைச் சேர்ந்த ராமலிங்கம் & கோவுக்கு வழங்கப்பட்டது. இந்த நிறுவனம், முதல்வர் மகன் மித்துனின், மைத்துனரின் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் பெரும்பாலான திட்டங்கள், உலக வங்கியின் நிதி உதவி பெற்றவை என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து ஜூன் 13-ம் தேதி ஊழல் தடுப்பு துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் நீதிமன்றம், வழக்கு பதிய உத்தரவிடுமாறு ஆர்.எஸ்.பாரதியின் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதே போல் கடந்த மாதம், முதலமைச்சர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்த வழக்கில், ஊழல் தடுப்புத் துறை முதல் கட்ட விசாரணை நடத்துமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.