This Article is From Mar 04, 2019

முதன்முறையாக மக்களவை தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிடுகிறார் கனிமொழி

மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கு திமுக சார்பாக விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இதில் தூத்துக்குடியில் போட்டியிடுவதற்காக திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி விருப்ப மனுத்தாக்கல் செய்துள்ளார்.

முதன்முறையாக மக்களவை தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிடுகிறார் கனிமொழி

திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் அளிப்பதற்கு இன்னும் 3 நாட்கள் மீதம் உள்ளன.

ஹைலைட்ஸ்

  • கனிமொழி 2-வது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார்
  • மக்களவை தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல்முறை
  • தலைமை முடிவு எடுத்தால் மட்டுமே தூத்துக்குடி தொகுதி என்கிறார் கனிமொழி

மக்களவை தேர்தலில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடவுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனுவை தாக்கல் செய்தார். 

திமுக மகளிரணி செயலாளராக இருக்கும் கனிமொழி தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். அவரது பதவிக்கால ஜூன் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. ஏற்கனவே 2 முறை மாநிலங்களவை உறுப்பினராக 12 ஆண்டுகள் கனிமொழி இருந்துள்ளார். 

தற்போது, மக்கள் மூலமாக நேரடியாக நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்பது கனிமொழியின் விருப்பமாக உள்ளது. இதையொட்டி அவர் விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார். இதனால் அவர் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்பது உறுதியாகி விட்டது. 

இருப்பினும், விருப்ப மனு அளித்த பிறகு பேட்டியளித்த கனி மொழி, தலைமைக் கழகம் முடிவு செய்த பின்னர்தான் தூத்துக்குடியில் தான் போட்டியிடுவது இறுதி செய்யப்படும் என்று கூறினார்.

தூத்துக்குடி மக்களவை தொகுதியைப் பொறுத்தவரையில், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன. இவற்றில் திருச்செந்தூர், தூத்துக்குடி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகள் மட்டுமே திமுக வசம் உள்ளன. 
 

.