நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக வரும் 24ஆம் தேதி, திமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் - சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் - நாடாளுமன்ற தொகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் கூட்டம் வரும் 24 ஆம் தேதி நடைபெறும் என, அக்கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் - சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற தொகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் கூட்டம் வருகிற 24-12-2018 திங்கட்கிழமை காலை 10.00 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.
இந்த கூட்டத்திற்கு மாவட்டக் கழகச் செயலாளர்கள் - சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற தொகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.