ஸ்டெர்லைட் ஆலையை அரசாணை வெளியிட்ட நிரந்தரமாக மூடியது தமிழக அரசு
Chennai: திமுக உள்ளிட்ட தமிழக எதிர்கட்சிகள், பசுமை தீர்ப்பாயத்தின் ஆய்வுக் குழுவிடம், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மனு அளித்துள்ளனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22 ஆம் தேதி நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இதில் போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட உத்தரவிட்டது. தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்து ஆய்வு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி, தருண் அகர்வால் தலைமையில், குழு ஒன்றை அமைத்தது ஆறு வார காலத்திற்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டது. அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர், தூத்துக்குடியில் ஆய்வு நடத்தினர். அங்கு பொது மக்களிடமும் அவர்கள் கருத்து கேட்டனர்.
தொடர்ந்து அவர்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று, பல தரப்பினர் மத்தியிலும் ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடுகள், மற்றும் அதை மூட வேண்டுமா என்பது குறித்தும் கேட்டு வருகின்றனர். அதைப் போன்ற ஒரு கூட்டத்தில் தான், ஸ்டெர்லைட் தரப்பில், ஆலையை மூடக் கூடாது என்று 45,000 மனுக்கள் சமர்பிக்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று சென்னையில் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்தியது தேசிய பசுமை தீர்ப்பாயக் குழு. அப்போது திமுக சார்பில் ராஜ்யசபா எம்.பி., ஆர்.எஸ்.பாரதி, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி மனு அளித்தார்.
தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், நாம் தமிழர் கட்சி மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில், ஆய்வுக் குழுவிடம் மனு அளிக்கப்பட்டது.