"நான் கலைஞரின் பேரன். நமது தலைவர் தளபதியின் மகன். இவற்றையெல்லாம் விட எனக்கு மிகவும் பெருமை தருவது திராவிட முன்னேற்றேக் கழகத்தினுடைய தொண்டன் என்பதுதான்"
திருச்சியில் கலைஞர் கருணாநிதியின் 96 ஆம் பிறந்தநாள் விழா மற்றும் நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலைஞரின் திருவுருவச்சிலையை, தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திறந்துவைத்து, உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதி எம்.பி., திருநாவுக்கரசர், திருச்சி மாவட்ட திமுக செயலாளர் கே.என்.நேரு, இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொண்டு கூட்டத்தில் உரையாற்றினார்.
உதயநிதி பேசுகையில், “திமுக, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன், ஊடகங்களில் பரவலாக ஒரு விஷயம் பற்றி விவாதிக்கப்பட்டு வருகிறது. அது என்னவென்றால், எனக்குக் கட்சியில் முக்கிய பதவி கொடுக்கப்படப் போகிறது என்று. பொறுப்பை எதிர்பார்த்தோ பதவியை எதிர்பார்த்தோ நான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. எந்தப் பதவியையும் எதிர்பார்த்து பணி செய்பவன் நான் இல்லை. தலைவர் முன்னிலையிலை நான் தெரிவித்துக் கொள்ள வேண்டியது அதுதான்.
நான் கலைஞரின் பேரன். நமது தலைவர் தளபதியின் மகன். இவற்றையெல்லாம் விட எனக்கு மிகவும் பெருமை தருவது திராவிட முன்னேற்றேக் கழகத்தினுடைய தொண்டன் என்பதுதான். என்றும் நான் கடைக்கோடித் தொண்டனாக இருந்து பணியாற்றவே விரும்புகிறேன்” என்று அதிரடியாக பேசினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், “பலர் கேட்கிறார்கள்… 38 எம்.பி-க்கள் ஜெயித்து என்னப் பயன். அவர்கள் என்ன செய்துவிட முடியும் என்று கேட்கிறார்கள். நாடாளுமன்றம் கூட்டப்படட்டும். இந்த 38 எம்.பி-க்களால் என்ன செய்ய முடியும் என்பதை காட்டுவோம்.
மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்பு என்கிற நச்சுப் பாம்பை மத்தியில் ஆளும் பாஜக அரசு புதுத்தப் பார்த்தது. அதற்கு நாம் தீர்க்கமாக தெரிவித்த எதிர்ப்புதான் அவர்கள் பின்வாங்கக் காரணம்.
நீட் தேர்வில் நடைபெற்றுள்ள தற்கொலைகளுக்கு முழுக்க முழுக்க மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசும், மாநிலத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் அதிமுக அரசும்தான் காரணம். அவர்கள் இருவரும்தான் அதற்கு முழு பொறுப்பை ஏற்க வேண்டும்” என்று பேசினார்.