This Article is From Apr 27, 2019

“சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்…”- அதிமுக-வை சமாளிக்க ஸ்டாலினின் அஸ்திரம்

தமிழகத்தில் ஆளும் அதிமுக-வைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ-க்கள் மீது கட்சித்தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று தமிழக சபாநாயகர் தனபாலிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது

“சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்…”- அதிமுக-வை சமாளிக்க ஸ்டாலினின் அஸ்திரம்

"கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ள மனு மீது பேரவைத் தலைவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது."

தமிழகத்தில் ஆளும் அதிமுக-வைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ-க்கள் மீது கட்சித்தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று தமிழக சபாநாயகர் தனபாலிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. இது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “பேரவைத் தலைவர் அந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள்மீது நடவடிக்கை எடுத்தால், பேரவைத் தலைவர்மீது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும்” என்று எச்சரித்துள்ளார். 

இது குறித்து ஸ்டாலின் மேலும், “மே 23ஆம் தேதி 22 சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் முடிவுகள் எதிர்நோக்கி இருக்கும் நிலையில், சட்ட அமைச்சர் சி.வி சண்முகம், அரசு கொறடா ராஜேந்திரன் ஆகியோர் பேரவைத் தலைவரை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகிய மூவர் மீதும் கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்திருப்பதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு 18 சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகு மைனாரிட்டி அரசாகவே செயல்பட்டது. அந்த வழக்கை முடிந்த வரை காலதாமதம் செய்து, 18 மாதங்களுக்கு மேல் தேர்தலே நடத்தாமல் அ.தி.மு.க. ஆட்சி தொடர மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும், மாநிலத்தில் உள்ள மாண்புமிகு ஆளுநர் அவர்களும் சட்டவிரோதமாக அனுமதித்தனர். அதன் பலன் பா.ஜ.க.விற்கு அ.தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணியாக மாறியது. ஆனால் தமிழக மக்கள் ஒரு மோசமான அரசின் நிர்வாக சீரழிவுகளை தினம் தோறும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பிறகு பல சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க - அ.தி.மு.க. ஆட்சி முற்றிலும் ஒரு மைனாரிட்டி ஆட்சியாகவே இந்த மக்களவைத் தேர்தலை சந்தித்தது.

சட்டமன்றத்தின் பேரவைத் தலைவரைப் பொறுத்தவரை கட்சி சார்பற்றவர். அந்த பதவிக்கு வந்த பிறகு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தலைவராக இருப்பவர். “பாரபட்சமற்ற முறையில் பேரவைத் தலைவரின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். அரசியல் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடாது” என்று பல்வேறு தீர்ப்புகள் வாயிலாக உச்ச நீதிமன்றம் பேரவைத் தலைவர்களை எச்சரித்துள்ளது.

கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ள மனு மீது பேரவைத் தலைவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. ஓ.பன்னீர் செல்வமும் அவருடன் முதலமைச்சருடன் ஐக்கியமான சட்டமன்ற உறுப்பினர்களும் அரசுக்கு எதிராக வாக்களித்து விட்டு பதவியில் தொடருவதை அனுமதித்திருக்கும் பேரவைத் தலைவர் இதில் அவசரம் காட்டி மைனாரிட்டி அரசுக்கு “கொல்லைப்புற வழியாக” மெஜாரிட்டி தேடித்தர முயலக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஒருவேளை நடுநிலைமை தவறி, அரசியல் சட்டத்தின் கடமைகளை மறந்து, பேரவைத் தலைவர் அந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள்மீது நடவடிக்கை எடுத்தால், பேரவைத் தலைவர்மீது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார். 

.