This Article is From Oct 19, 2018

தலைமைச் செயலக கட்டட வழக்கு: முதல்வருக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்!

முந்தைய திமுக ஆட்சியின்போது (2006-2011) சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது

தலைமைச் செயலக கட்டட வழக்கு: முதல்வருக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்!

தலைமைச் செயலக கட்டடத்தில் எந்த வித முறைகேட்டிலும் திமுக ஈடுபடவில்லை, திமுக

Chennai:

சென்னை ஓமந்தூரார் தோட்டத்துக்குப் பக்கத்தில் திமுக ஆட்சியின் போது கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டட கட்டுமானத்தின் போது ஊழல் நடந்திருப்பதாகக் கோரி, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, விசாரணைக்குத் தடை உத்தரவு வாங்க மனு தாக்கல் செய்துள்ளது. திமுக-வின் இந்த நடவடிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாடியிருந்தார். அதற்கு எதிர்கட்சித் தலைவரும் திமுக-வின் தலைவருமான மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

முந்தைய திமுக ஆட்சியின்போது (2006-2011) சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. இதில் முறைகேடு நடந்திருப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, இந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில், ஜெயலலிதா தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தொடர்ந்த வழக்கில் ரகுபதி கமிஷனை கலைக்க கடந்த 2015 ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் ரகுபதி கமிஷன் கலைக்கப்பட்டது. அதே நேரத்தில், தலைமைச் செயலக கட்டட கட்டுமானப் பணியில் முறைகேடு நடந்திருப்பதாக சந்தேகப்பட்டால் அரசு, லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் விசாரணை நடத்தலாம் என்றும் நீதிமன்றம் வழிகாட்டியது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை இந்த விவகாரம் குறித்து விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் திமுக, இந்த விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்துள்ளது.

இதையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘தலைமைச் செயலக கட்டட வழக்கைப் பொறுத்தவரை திமுக, தங்கள் மீது எந்தத் தவறும் இல்லையென்று நினைத்தால், எதற்காக வழக்கு விசாரணையை எதிர்கொள்ள தயங்க வேண்டும். இதிலிருந்தே தெரிகிறது, அந்த விவகாரத்தில் ஏதோ தவறு நடந்திருப்பது' என்று பேசினார்.

இதற்கு ஸ்டாலின், ‘ஒரு வழக்கு விசாரணைக்கு தடை கோருவது என்பது சட்ட ரீதியாக இருக்கும் உரிமை. அதைத்தான் நாங்கள் செய்துள்ளோம். அப்படி இல்லையென்று அவர்கள் நினைத்தால், தாரளமாக வழக்குக்கு எதிராக வாதடலாம். அதை விடுத்து ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை சுமத்தக் கூடாது.

தலைமைச் செயலக கட்டடத்தில் எந்த வித முறைகேட்டிலும் திமுக ஈடுபடவில்லை. அது குறித்து அதிமுக சொல்லும் அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை' என்று பதில் தெரிவித்துள்ளார்.

.