This Article is From Dec 23, 2019

CAA-க்கு எதிரான திமுக பேரணி தொடக்கம்: 110 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு!

இதற்காக அங்கு சுமார் 5000 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்த பேரணி ஒன்றரை கிலோ மீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CAA-க்கு எதிரான திமுக பேரணி தொடக்கம்: 110 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு!

கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என்று பலரும் பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி சென்னை எழும்பூரில் இருந்து தொடங்கியுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல பகுதிகளில் போராட்டக்காரர்கள் போலீசாரிடையே வன்முறை ஏற்பட்டு வருகிறது. 

இதனிடையே, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் இருந்து தொடங்கியுள்ளது.

இதில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களான திருமாவளவன், வைகோ, முத்தரசன், காதர் மொய்தீன், ராமகிருஷ்ணன், உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். ப.சிதம்பரம், வீரமணி, கனிமொழி, உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர். 

மேலும், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என்று பலரும் பேரணியில் கலந்துகொண்டுள்ளனர். பல்வெறு முழக்கங்களுடன் பேரணி நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு சுமார் 5000 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்த பேரணி ஒன்றரை கிலோ மீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேரணியை முன்னிட்டு எழும்பூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எழும்பூரில் இருந்து புதுப்பேட்டை செல்லும் வழியில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆதித்தனார் சாலையில் ஒரு வழிப்பாதை மட்டும் பயன்படுத்தப்படுகிறது

முன்னதாக குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக திமுக தலைமையில் இன்று நடைபெறும் பேரணிக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. திமுக கூட்டணி கட்சிகளின் பேரணிக்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தடையை மீறி பேரணி நடைபெற்றால் அதை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

.