Read in English
This Article is From Aug 11, 2018

திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத் ரத்னா : நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா கோரிக்கை

ஐம்பதாண்டு காலம் திமுகவின் தலைமைப் பொறுப்பில் இருந்த கருணாநிதி அவர்கள், 19 ஆண்டுகள் தமிழக முதல்வராக இருந்தவர் ஆவார்.

Advertisement
தெற்கு

கருணாநிதி நாட்டின் மிக உயர்ந்த தலைவரும் திராவிட இயக்கப் பெருந்தலைவரும் ஆவார்: திருச்சி சிவா

New Delhi:

மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதிக்கு நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா அளிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அக்கட்சியின் எம்.பி. திருச்சி சிவா கோரிக்கை வைத்தார். வரலாற்றில் அழியாத தடம் பதித்துச் சென்றிருக்கும் கருணாநிதி என்னும் தலைவருக்கு அவர் ஆற்றிய சீரிய பணிகளுக்காக பாரத் ரத்னா அளிப்பதே சரியான கௌரவமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தின்போது இக்கோரிக்கையை எழுப்பிய சிவா, “கருணாநிதி நாட்டின் உயர்ந்த தலைவரும் திராவிடப் பெருந்தலைவரும் ஆவார்” என்று புகழாரம் சூட்டினார். மேலும், “95 ஆண்டுகாலம் அவர் வாழ்ந்த வாழ்க்கையில் 80 ஆண்டு காலம் பொதுவாழ்வில் இருந்துள்ளார். அடித்தட்டு, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாழ்நாளெல்லாம் போராடியவர் கருணாநிதி. தலைசிறந்த பேச்சாளர், ஆற்றல்மிகு எழுத்தாளர், சிந்தனையாளர், கொடையாளி, நாடகக் கலைஞர் என பன்முக ஆளுமையாக விளங்கியவர். எண்பது படங்களுக்குத் திரைக்கதை, வசனம் எழுதியவர். ஈடுபட்ட அனைத்துத் துறைகளிலும் ஈடு இணையற்ற சாதனை படைத்தவர். சொற்களில் அடக்க முடியாத பெருவாழ்வு வாழ்ந்தவர். உறுதிமிக்க ஓய்வறியாப் போராளியான கருணாநிதி தனது இறுதிமூச்சு வரை சமூகநீதி, மதச்சார்பின்மை, சுயமரியாதை ஆகியவற்றுக்காகப் போராடினார். வரலாற்றில் அழியாத் தடம் பதித்துச் சென்றுள்ள அவருக்கு பாரத் ரத்னா வழங்குவதே சாலப் பொருத்தம்” என்று அவர் வலியுறுத்தினார்.

இதே கோரிக்கையை இரு தினங்களுக்கு முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும் வலியுறுத்தியிருந்தார்.

ஐம்பதாண்டு காலம் திமுகவின் தலைமைப் பொறுப்பில் இருந்த கருணாநிதி அவர்கள், ஐந்து முறை தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 19 ஆண்டுகள் தமிழக முதல்வராக இருந்தவர் ஆவார்.
 
 
 
 
Advertisement
Advertisement