This Article is From Jan 05, 2019

தோல்வி பயத்தில் தேர்தலை நிறுத்த முயற்சிக்கிறது திமுக! - டிடிவி குற்றச்சாட்டு

திருவாரூர் இடைத்தேர்தலில் தோல்வி பெற்றுவிடுவோம் என்ற பயம் காரணமாக திமுக தேர்தலை நிறுத்த முயற்சிக்கிறது என அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

தோல்வி பயத்தில் தேர்தலை நிறுத்த முயற்சிக்கிறது திமுக! - டிடிவி குற்றச்சாட்டு

இதுகுறித்து தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

திருவாரூர் இடைத்தேர்தலுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. அந்த கட்சி யாருடன் கூட்டணியில் இருக்கிறது? திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோரை பேச வைத்தது யார்?

ஆளும்கட்சி எப்படி பயப்படுகிறதோ அப்படி பிரதான எதிர்கட்சியான திமுக நீதிமன்றம் வாயிலாக தேர்தலை நிறுத்த பார்க்கிறது. திருவாரூர் இடைத்தேர்தலை நிறுத்த சொல்லி உச்சநீதிமன்றத்தில் திமுக மூலமாகத்தான் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தேர்தலை போல், திருவாரூரிலும் எங்களுக்கு யாரும் போட்டியில்லை. அதனால் எங்கள் கட்சி வேட்பாளர் தான் வெற்றிபெறுவார். தேர்தல் குறித்து கருத்து கணிப்பு நடத்தியிருப்பார்கள், அமமுக மாபெரும் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்பது தெரிந்ததால் இதனை எப்படியாவது தள்ளிப்போட ஆளும்கட்சியும், எதிர்கட்சியும் முடிவு செய்திருக்கலாம் என்று அவர் கூறினார்.

முன்னதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில், திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுள்ள அறிக்கையை, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் திருவாரூர் மாவட்டத்துக்குட்பட்ட முக்கிய பிரமுகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துகளைக் கேட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.


 

.