அக்டோபரில் தொடங்கும் வடகிழக்கு பருவமழையை நம்பியே சென்னை உள்ளது.
Chennai: தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கக்கோரி, வரும் 22ஆம் தேதி முதல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.
தமிழக அரசின் அலட்சியமும் மற்றும் நிர்வாக திறன்குறைவே தண்ணீர் தட்டுபாட்டிற்கு காரணம் என திமுக குற்றசாட்டியுள்ளது.
இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், குடிநீர் பிரச்னைத் தீர்க்க எடுத்த நடவடிக்கை என்ன, நீர் வற்றி வருகிறது என்று கடந்த ஆண்டே தெரிந்திருந்தும் அது குறித்து அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிமுக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு பிறகும், தண்ணீருக்காக காலிக் குடங்களுடன் அலையும் தாய்மார்களையும், ஆங்காங்கே அமைதி வழியில் மறியலில் ஈடுபடும் மக்களையும் கொச்சைப்படுத்திடும் வகையில் அமைச்சர்களும், முதல்வரும் பேட்டியளித்து வருகின்றனர்.
குடிநீர் தட்டுப்பாடு என்பது வதந்தி என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேட்டி கொடுக்கிறார். எங்கோ ஓரிடத்தில் உள்ள குடிநீர் பிரச்னையைப் பெரிதாக்கி ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்க வேண்டாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.
உணவகங்கள் மூடப்படுவது, பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீரின்றி தவிப்பது, ஐ.டி. கம்பெனிகள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய உத்தரவிட்டிருப்பது, பல தங்கும் விடுதிகள் மூடப்படுவது என்று எங்கு பார்த்தாலும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடி, சென்னை மாநகர மக்களும், தமிழகமெங்கும் உள்ள மக்களும் பெரும் துயரத்துக்கு உள்ளாகி தினம் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த அரசு ஏற்க மறுத்து, குடிநீர் பிரச்னையே இல்லை என்று பொறுப்பற்ற விவாதத்தில் ஈடுபட்டு வருகிறது. எனவே, அதிமுக அரசின் அலட்சியத்தைக் கண்டித்தும், தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னையை சமாளிக்க உடனடியாக ஆக்கப்பூர்வமான, போர்க்கால நடவடிக்கைகளில் அதிமுக அரசு ஈடுபட வேண்டும் என வலியுறுத்தி, வரும் ஜூன் 22-ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாவட்டச் செயலாளர்கள் பொதுமக்களின் ஆதரவுடன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறவழியில் நடத்திட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.