உள்ளாட்சி தேர்தலை நிறுத்த வேண்டும் என்பது எங்களது கோரிக்கை இல்லை; முறையாக நடத்த வேண்டும், ஒதுக்கீடுகள் முறையாக இல்லை, அதை சரி செய்யுங்கள் என்று கோரித்தான் நீதிமன்றத்துக்கு சென்றோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
முன்னதாக, நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், திமுக உள்ளாட்சித் தேர்தலை மிரட்சியோடு பார்க்கிறது. திமுக ஒரு கோடீஸ்வரர் கட்சி. அங்கு விருப்பமனு ஒன்றுக்கு 50 ஆயிரம் வாங்குகிறார்கள். இவருக்கு தேர்தலை கண்டு பயமில்லை என்றால் தேர்தலில் நேரடியாக சந்திக்க வேண்டியதுதானே என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, திட்டமிட்டு நான்கு மாவட்டங்கள் 9 மாவட்டங்களாக புதிதாக பிரிக்கப்பட்டுள்ளன. பிரிக்கப்பட்ட இந்த மாவட்டங்களில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு 50 ஆயிரம் வாக்குகள் பெறக்கூடிய, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், 5000 வாக்குகள் பெறக்கூடிய ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஊராட்சித் தலைவர்கள் என எப்படி பிரித்து தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்ற சந்தேகத்தை நாங்கள் கேட்டுள்ளோம்.
அதுமட்டுமின்றி, ஏற்கனவே உயர் நீதிமன்றம் எந்தெந்த முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்று விதிமுறைகளை வகுத்து கொடுத்துள்ளதோ, அந்த அடிப்படையில் நடத்தப்படுகிறதா என்பது குறித்து எங்கள் அமைப்புச் செயலாளர் மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து, தேர்தலை எப்படி நடத்தப்போகிறீர்கள் என்றுதான் கேட்டுள்ளார்.
சிசிடிவி கேமரா பொருத்துவீர்களா, ஒதுக்கீடு முறையாக செய்துள்ளீர்களா, உயர் நீதின்றம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களின்படி நடத்தப்போகிறீர்களா, மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளதே அவற்றைச் சரிசெய்து தேர்தல் நடத்தப்போகிறீர்களா என்றுதான் கேட்டுள்ளோம். மற்றபடி தேர்தலை நிறுத்த வேண்டும் என்று ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை.
ஆனால் வேண்டுமென்றே திட்டமிட்டு தேர்தலை நிறுத்த வேண்டும் என்ற அடிப்படையில்தான், இன்றைக்கு இருக்கும் அதிமுக ஆட்சி ஈடுபட்டு கொண்டிருக்கிறதோ என்பதுதான் எங்களுக்கு எழுந்திருக்கும் சந்தேகம். நாங்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க திமுக தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.