This Article is From May 24, 2019

திமுக வெற்றி தமிழர்கள் தங்களை காத்துக்கொண்ட பாதுகாப்பு கவசம்: வைரமுத்து

இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்கள் எல்லாம் அந்த சுனாமி அலைகளுக்கு நனைந்திருந்தபோது, அந்த அலையில் நனையாத சில மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது.

திமுக வெற்றி தமிழர்கள் தங்களை காத்துக்கொண்ட பாதுகாப்பு கவசம்: வைரமுத்து

மக்களவைத் தேர்தலில் திமுக பெற்ற வெற்றி தமிழக மக்களுக்கு கவசமாக விளங்கும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். 

தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களவைத் தேர்தல் முடிவுகளில் பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அதிக வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளன. இதில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 18 இடங்களிலும், அதிமுக 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 5 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் கடும் தோல்வியை சந்தித்தது. 

தமிழகத்தில் திமுக கூட்டணியில், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் அவரவர் தனி சின்னத்திலும், மதிமுக, ஐ.ஜே.கே, விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போன்ற கட்சிகள் திமுகாவின் உதய சூரியன் சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. 

மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதியில் திமுகவின் சொந்த சின்னமான உதய சூரியன் சின்னத்தில் 23 தொகுதியில் களம் கண்டு வெற்றி பெற்றுள்ளது. இந்த மாபெரும் வெற்றி மூலம் திமுக தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த கவிஞர் வைரமுத்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது,

இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்கள் எல்லாம் அந்த சுனாமி அலைகளுக்கு நனைந்திருந்தபோது, அந்த அலையில் நனையாத சில மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது என்பது திராவிட இயக்கத்திற்கும், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற கொள்கைவாதிகளுக்கும் கிடைத்த வெற்றியாக நான் கருதுகிறேன். 

இந்த வெற்றியை தமிழர்கள் கொண்டாட வேண்டும், தமிழர்கள் தங்களை காத்துக்கொண்ட பாதுகாப்பு கவசமாக இந்த வெற்றியை நான் கருதுகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

.