தர்மேந்திர பிரதானுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் டி.ஆர்.பாலு பேச முற்பட்டபோதும் அவர் அனுமதிக்கப்படவில்லை.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. அதில் மத்திய பாஜக அரசுக்கு, திமுக எம்.பி-க்கள் தொடர்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதி நாடாளுமன் உறுப்பினர் டி.ஆர்.பாலு, சேலம் எஃகு ஆலை விவகாரம் குறித்துப் பேச, அதற்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கொதிப்பான பதிலைக் கொடுத்துள்ளார்.
“சேலத்தில் இருக்கும் எஃகு ஆலையை உருவாக்கியதில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பங்கு அலப்பரியது. அதில் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு வர திட்டம் போட்டு, 2010 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் நடைமுறைபடுத்தப்பட்டது. பொதுத் துறை நிறுவனமான சேலம் எஃகு ஆலையை தனியார் இடத்தில் கொடுக்க தற்போது மத்தியில் ஆட்சியில் இருக்கும் அரசு துடிக்கிறது. இது சரியல்ல.
சேலம் ஆலைக்குத் தேவையான நிதிப் பற்றாக்குறையை எங்கள் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வராக வந்தவுடன், அடைக்க ஏற்பாடு செய்வார். தமிழர்களின் பெருமைகளில் ஒன்றாகக் கருதப்படும் சேலம் ஆலையை தனியார் இடத்தில் கொடுப்பதற்கு எந்தவித நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது,” என்று மத்திய அரசை வலியுறுத்தினார் டி.ஆர்.பாலு.
பாலுவின் முறையீட்டுக்கு பதிலளித்த, தர்மேந்திர பிரதான், “டி.ஆர்.பாலு இந்த விவகாரத்தைக் கொண்டு வந்ததற்கு நன்றி. 2010 ஆம் ஆண்டு சேலம் எஃகு ஆலை நவீனப்படுத்தப்பட்டதாக பெருமையாக சொல்கிறீர்கள். ஆனால், அப்போது ஆயிரக்கணக்கான கோடியில் ஆலை நவீனப்படுத்தப்பட்டபோது, அதை சரியாக நிர்வகிக்காமல், ஊழலில் ஈடுபட்டு, மிகவும் தவறான வழிமுறைகளை கையாண்டுள்ளது அப்போது மாநிலத்தில் ஆட்சியில் இருந்த அரசு. அதன் காரணமாகவே வேறு வழியில்லாமல் தனியார் ஏலத்துக்கு விடும் முடிவுக்கு வந்துள்ளோம்,” என்று சொன்னதும் பாலு உள்ளிட்ட திமுக எம்.பி-க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
பின்னர் நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா தலையிட்டு, இரு தரப்பையும் சமாதானப்படுத்தினார். தர்மேந்திர பிரதானுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் டி.ஆர்.பாலு பேச முற்பட்டபோதும் அவர் அனுமதிக்கப்படவில்லை.