DMK vs Congress: "உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட மன வருத்தத்தைத்தான் வெளிப்படுத்தினோம். அதில் தவறேதும் இல்லை"- கே.எஸ்.அழகிரி
DMK vs Congress: திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், உள்ளாட்சித் தேர்தலில் நடத்தப்பட்ட விதத்திற்காக கொதித்தெழுந்து அறிக்கை வெளியிட்டது. அறிக்கை வெளியிட்டவர் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி. அப்போது கூட்டணிக்குள் பற்றவைத்த நெருப்பு இன்னும் கனன்று கொண்டிருக்கிறது.
27 மாவட்டங்களில் நட்ந்த உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் வந்த பின்னர் கே.எஸ்.அழகிரி, “உள்ளாட்சித் தேர்தலுக்கு திமுக தலைமையிலிருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில் கூட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 303 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிகளில் இதுவரை 2 இடங்கள் மட்டும் திமுக தலைமையால் வழங்கப்பட்டுள்ளது.
27 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளில் ஒரு மாவட்டட ஊராட்சித் தலைவர் பதவியோ, துணைத் தலைவர் பதவியோ இதுவரை வழங்கப்படவில்லை. இது கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்,” என்று அறிக்கையின் மூலம் புலம்பித் தள்ளினார்.
இதனால் உஷ்மடைந்த திமுக, சிஏஏவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டத்தைப் புறக்கணித்தது. தொடர்ந்து இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க அழகிரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லிக்கு சென்று சந்தித்தார்.
இந்த சமயத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன், “காங்கிரஸ், திமுகவைவிட்டு விலகுவதால் என்ன பிரச்னை. எங்களுக்கு ஒரு நட்டமும் இல்லை. யாரையும் நாங்கள் வெளியே போ என்று சொல்ல மாட்டோம். ஆனால், தானாக போகிறவர்களைப் பிடித்து வைக்கவும் மாட்டோம்,” என்று அதட்டலாக பேசினார்.
இது காங்கிரஸ் வட்டாரத்திலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கே.எஸ்.அழகிரி, “திமுகவும் காங்கிரஸும் கூட்டணி அமைத்தது கொள்கை அடிப்படையில். தளபதி ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட மன வருத்தத்தைத்தான் வெளிப்படுத்தினோம். அதில் தவறேதும் இல்லை,” என்று கூறியிருக்கிறார். இந்தக் கருத்துக்கு திமுக தரப்பு என்ன ரியாக்ஷன் கொடுக்கும் என்று தெரியவில்லை.