மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க தமிழக அரசு தயாராக இல்லை என்று கூறி சட்டசபையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டசபைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. ஏற்கனவே, எதிர்கட்சி திமுக தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை எழுப்ப தயாராக வந்தனர். குறிப்பாக மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து தனியாக ஒரு சிறப்பு சட்டசபைக் கூட்டம் நடத்த வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி வந்தார்.
இந்த நிலையில், இன்று நடந்த சட்டசபை கூட்டத்தில் பேசிய திமுகவினர், மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில், மும்மொழிக்கு எதிரான தமிழக அரசின் நிலைப்பாட்டையும், தமிழகத்தில் இருமொழிக்கொள்கை தான் இருக்கும் என்று முதல்வர் பழனிசாமி கூறியிருந்தையும் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், புதிய கல்வி கொள்கையில் கல்லூரி அளவிலான நுழைவுத்தேர்வுகள் உள்ளிட்ட பாதகமான அம்சங்கள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, புதிய கல்விக்கொள்கை குறித்து பள்ளி அளவில் பள்ளிக்கல்வித்துறைசார்பிலும், கல்லூரி அளவில் உயர்கல்வித்துறை சார்பிலும் இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், இந்தக் குழுக்கள் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், இதற்கென தனியாக தீர்மானம் எடுக்கத் தேவையில்லை என்றும் கூறினார்.
இதனையடுத்து, புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் எடுக்க தயாராக இல்லை என்பதைக் கண்டித்து சட்டசபையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.