திமுக எம்.எல்.ஏ துரைமுருகன், செய்தியாளர்களை சந்தித்தபோது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வறுத்தெடுத்தார்.
இன்று சட்டமன்றத்தில் திமுக, ‘மத்திய அரசு, தமிழகத்தில் பல்வேறு வகைகளில் இந்தியைத் திணித்து வருகிறது. அதை எதிர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தியிருக்கிறது. இதற்கு ஆளும் அதிமுக தரப்பிடமிருந்து சரியான பதில் வரவில்லை என்று கூறி, முதல்வரைக் கண்டித்து திமுக, பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தது. இதைத் தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ துரைமுருகன், செய்தியாளர்களை சந்தித்தபோது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வறுத்தெடுத்தார்.
தபால் துறையில் காலி பணியிட தேர்வுகளுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அஞ்சலர் உள்ளிட்ட 4 வகை பணியிடங்களுக்கான இந்தத் தேர்வு நேற்று நடைபெற்றது. கடந்த ஆண்டு இத்தேர்வு தமிழ் உட்பட பல பிராந்திய மொழிகளிலும் நடத்தப்பட்டன.
ஆனால், தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன்னர் வெளியான அறிவிப்பில், தபால் தேர்வுகள், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழகத்திலிருந்து 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், திடீரென தமிழ் மொழி நீக்கப்பட்டது பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது. இதற்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய திமுக, “மத்திய அரசு, இந்தியைத் திணிக்கும் வேலையில் ஈடுபடுவதைப் பார்க்க முடியாது. எனவே, அவர்களைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சொன்னோம். அது முடியாது என்றால், குறைந்தபட்சம் வலியுறுத்தியாவது தீர்மானம் நிறைவேற்றுங்கள்” என்றது.
இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கில் நீங்கள் செயல்பட்டு வருகிறீர்கள். எப்படியாவது வெளிநடப்பு செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டு பேசினால், நான் என்ன செய்ய முடியும்” என்று பதில் சொன்னார். இதைத் தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ-க்கள், துரைமுருகன் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்புக்குப் பின்னர் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், “இந்தி எதிர்ப்புக் குறித்துப் பேசினால், நாங்களும் அதே நிலைபாட்டில்தான் இருக்கிறோம் என்று அதிமுக அரசு சொல்கிறது. ஆனால், மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்ற மாட்டார்கள், வற்புறுத்தியும் தீர்மானம் நிறைவேற்ற மாட்டார்கள்.
இதைச் சொன்னால், எங்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் முதல்வர் எடப்பாடி பேசுகிறார். இந்த அரசு, இந்தித் திணிப்பை எப்படிச் செய்தாலும் ஏற்றுக் கொள்ளும். வாயில் இந்தியைத் திணித்தால் கூட இவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்” என்று உஷ்ணமாக தெரிவித்துவிட்டு நடையைக் கட்டினார்.