This Article is From Oct 22, 2018

வணிகர் சங்க உண்ணாவிரதப் போராட்டத்துக்கு திமுக துணை நிற்கும்! - மு.க.ஸ்டாலின்

வர்த்தக பிரதிநிதிகளின் ஆலோசனைகளை முன் கூட்டியே பெற்று நிதி நிலை அறிக்கை தயாரித்த ஒரே ஆட்சி கலைஞரின் திமுக ஆட்சி என்பதை வணிகர்கள் நன்கு உணருவார்கள்

Advertisement
Tamil Nadu Posted by

இந்திய சிறு – குறு வணிகர்களின் கோரிக்கைகளை புறக்கணிக்கும் மத்திய – மாநில அரசுகளை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவை சார்பில் நடைபெறும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு திமுக துணை நிற்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மத்திய - மாநில அரசுகளால் இந்திய சிறு - குறு வணிகர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதைக் கண்டித்து, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில், அக்டோபர் 23-ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனப்பூர்வமான ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement

மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசாலும், மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க அரசாலும் வணிகர்கள் பல்வேறு இன்னல்களுக்கும், பாதிப்புகளுக்கும் ஆளாகியுள்ளார்கள். வரலாறு காணாத பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் முறையற்ற செயல்பாடு, சுங்கக் கட்டண உயர்வு, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு மற்றும் குறு தொழில்கள் முடக்கம் போன்றவற்றால் வர்த்தகம் மட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரமும் தாக்குதலுக்கு உள்ளாகி நிற்கிறது. திமுக சார்பில் அவ்வப்போது மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்தும் - மக்களைப் பாதுகாப்பதற்கு இந்த இரு அரசுகளுமே முன்வரவில்லை என்பது வேதனைக்குரியது.

பல முனை வரி விதிப்பு முறையை ஒரு முனை வரி விதிப்பு முறையாக மாற்றியது, ஏழை எளிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் 589 பொருள்களுக்கு முழு வரி விலக்கு அளித்தது, முதலமைச்சர் தலைமையில் வணிகர் நல வாரியம் அமைத்தது, அந்த வாரியத்திற்கு முதன்முதலில் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது, உயிரிழந்த வியாபாரியின் குடும்பநல நிதி முதலில் 20 ஆயிரம் ரூபாய் என்றும் பிறகும் 50 ஆயிரமாகவும், 28.02.2011 அன்று அதை 1 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி அரசு ஆணை எண் 44-ஐ வெளியிட்டது எல்லாம் கலைஞர் தலைமையிலான திமுக அரசு. வர்த்தக பிரதிநிதிகளின் ஆலோசனைகளை முன் கூட்டியே பெற்று நிதி நிலை அறிக்கை தயாரித்த ஒரே ஆட்சி கலைஞரின் திமுக ஆட்சி என்பதை வணிகர்கள் நன்கு உணருவார்கள்.

Advertisement

ஆகவே, கலைஞர் வழியில், வணிகப் பெருமக்களின் கோரிக்கைகளுக்காகவும், ஜனநாயக ரீதியிலான அவர்களின் போராட்டங்களுக்காகவும் திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் துணை நிற்கும் என்று இந்த நேரத்தில் தெரிவித்து, மாபெரும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என அவர் கூறியுள்ளார்.

Advertisement