This Article is From Mar 11, 2019

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நடத்த வழக்கை வாபஸ் பெற்றது திமுக!

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நடத்தக்கோரி தேர்தல் வழக்கை வாபஸ் பெற்ற திமுகவைச் சேர்ந்த சரவணன் தேர்தல் ஆணையத்துக்கு கடிதமும் எழுதியுள்ளார்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நடத்த வழக்கை வாபஸ் பெற்றது திமுக!

தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 19ம் தேதி தொடங்குகிறது. நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, மே 23ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டசபைத் தொகுதிகளில் ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, அந்த 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறாது. இதனால் 18 சட்டசபை தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு 18ஆம் தேதி இடைத்தேர்தலை நடத்தக் கோரி, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட மருத்துவர் சரவணன் மனு அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள கடிதத்தில், தேர்தல் நடத்த வேண்டாம் என நீதிமன்றம் குறிப்பிடவில்லை. வழக்குகள் நிலுவையில் இருந்தபோதே பல தொகுதிகளில் இதற்குமுன் தேர்தல் நடந்துள்ளன. திருப்பரங்குன்றம் தொகுதி மக்களின் நலன் கருதி அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று அந்த மனுவில் சரவணன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வழக்கு நிலுவையில் இருப்பதால் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்பது சட்டமல்ல என்றும், திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற்ற ஏ.கே.போஸ் காலமாகிவிட்டார் என்றும் அந்த கடிதத்தில் சரவணன் குறிப்பிட்டுள்ளார்.

.