This Article is From Jan 09, 2020

“Edappadi-க்கு அந்த தில் இல்ல…”- முதல்வருக்கு நேரடியாக சாவல்விட்ட துரைமுருகன்!

"மத்திய அரசை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்ற ஒரு தில் வேண்டும்."

“Edappadi-க்கு அந்த தில் இல்ல…”- முதல்வருக்கு நேரடியாக சாவல்விட்ட துரைமுருகன்!

"இவர்கள் மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கிறார்கள்"

இந்த ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த 6 ஆம் தேதி ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பின்னர் நடக்கும் முதல் சட்டசபைக் கூட்டம் என்பதால் பல்வேறு காரசார விவாதங்கள் அவைக்குள் நடந்து வருகின்றன. இன்றைய கூட்டத் தொடருக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், “எடப்பாடி பழனிசாமிக்கும் அதிமுக அரசுக்கும் தில் இல்லை. அவர்களுக்கு எப்போதும் அது வராது,” என்று கறாராக விமர்சித்துள்ளார். 

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டமான சிஏஏவுக்கு எதிராக திமுக உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளும் நாடு முழுவதும் போராட்டங்களை அரங்கேற்றி வருகின்றன. பல மாநில முதல்வர்களும், சிஏஏ மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடான என்ஆர்சி-ஐ ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயன், சிஏஏவுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் வரை சென்றுள்ளார். இந்நிலையில் சட்டசபைக் கூட்டத்தொடர் தொடங்கியவுடன், ‘சிஏஏவுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். அதற்கு அரசு தரப்பு, “ஆய்வு செய்து பரிசீலிப்போம்” என்றது. 

1jo8mjvg

இன்று மீண்டும் அது குறித்து திமுக தரப்பு சட்டசபையில் கேள்வி எழுப்பியது. அதற்கு சபாநாயகர் தனபால், “தீர்மானம் ஆய்வில் இருக்கிறது. முடிவெடுக்கப்படும்,” என்றார். இதனால் கோபமடைந்தது திமுக தரப்பு.

இதைத் தொடர்ந்து சட்டமன்றத்துக்கு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், “நாடு முழுவதும் பல மாநில முதல்வர்களும் என்ஆர்சிக்கு சிஏஏவுக்கும் எதிராக நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். ஆனால், எதிர்க்கட்சி வலியுறுத்தியும் அது குறித்து வாய் திறக்காமல் இருக்கிறது அதிமுக அரசு. எதற்கெடுத்தாலும் ஆய்வில் இருக்கிறது என்கிறார் சபாநாயகர். அவரின் ஆயுள் முடிந்தால் கூட தீர்மானம் ஆய்வில்தான் இருக்கும் போல.

மத்திய அரசை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்ற ஒரு தில் வேண்டும். அந்த தில் இந்த அதிமுக அரசுக்கு இல்லை. எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. அந்த தில் வரவே வராது. காரணம் இவர்கள் மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கிறார்கள்,” என்று கடுகடுத்தார். 

.