This Article is From May 22, 2020

''பாஜக கொள்கைகளை ஏற்றால் மட்டுமே நாட்டை பாதுகாக்க முடியும்'' - வி.பி.துரைசாமி கருத்து

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 'திமுக தனது கொள்கையில் இருந்து மாறிச் சென்று விட்டது. அப்படியிருக்கையில் நான் அந்த கட்சியை விட்டு விலகுவதில் என்ன தவறு இருக்கிறது.' என்று கூறினார்.

''பாஜக கொள்கைகளை ஏற்றால் மட்டுமே நாட்டை பாதுகாக்க முடியும்'' - வி.பி.துரைசாமி கருத்து

பாஜக மாநில தலைவர் எல். முருகன், மூத்த தலைவர் இல. கணேசன் ஆகியோர் முன்னிலையில் வி.பி. துரை சாமி இன்று பாஜகவில் சேர்ந்தார்.

Chennai:

பாஜக கொள்கைகளை ஏற்றுக் கொண்டு நடந்தால் மட்டுமே நாட்டை பாதுகாக்க முடியும் என்று அக்கட்சியில் சேர்ந்திருக்கும் திமுகவின் முன்னாள் துணை பொதுச் செயலாளர் வி.பி. துரை சாமி தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் எல். முருகன், மூத்த தலைவர் இல. கணேசன் ஆகியோர் முன்னிலையில் வி.பி. துரை சாமி இன்று பாஜகவில் சேர்ந்தார். 

இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 'பாஜகவால் இந்தியா பாதுகாப்பான கரங்களுக்குள் இருக்கிறது. பாஜகவின் கொள்கைகளை ஏற்று நடந்தால் மட்டுமே நாட்டை பாதுகாக்க முடியும்' என்று தெரிவித்தார்.

திமுகவில் துரைசாமிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் அவர் சில தினங்களுக்கு முன்பாக பாஜக தமிழக தலைவர் எல். முருகனை சந்தித்து பேசினார். இதனால் அவர் கட்சி தாவக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

நேற்று, துரைசாமியை கட்சியின் துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கி மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார்.

இருப்பினும், திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அவர் நீக்கப்படவிலலை. அதிலிருந்தும் தன்னை நீக்குமாறு கோரி ராஜினாமா கடிதத்தை துரைசாமி அனுப்பியதாக கூறப்படுகிறது. 

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 'திமுக தனது கொள்கையில் இருந்து மாறிச் சென்று விட்டது. அப்படியிருக்கையில் நான் அந்த கட்சியை விட்டு விலகுவதில் என்ன தவறு இருக்கிறது.' என்று கூறினார்.

கருணாநிதியின் அழைப்பை ஏற்றுத்தான் திமுகவில் தான் சேர்ந்ததாகவும், தற்போது பாஜகவின் கொள்கைகளை முழுவதுமாக ஏற்று கொண்டுள்ளதாகவும் துரை சாமி தெரிவித்துள்ளார். 

முன்னதாக கடந்த 2014-ல் முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன் திமுகவிலிருந்து விலகி பாஜகவில், அமித் ஷா முன்னிலையில் சேர்ந்தார்.

கடந்த ஆண்டு பிரபல நடிகை குறித்து நடிகர் ராதாரவி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதன் காரணமாக திமுக அவரை கட்சியில் இருந்து நீக்கியது. அதன்பின்னர் அவர் பாஜகவில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

.