This Article is From May 27, 2019

வதந்திகளை நம்பாதீர்! திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

மாணவர்களும், பெற்றோர்களும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

வதந்திகளை நம்பாதீர்! திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
Ahmedabad:

தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஏப்ரல் கடைசி வாரம் கோடை விடுமுறை விடுவது வழக்கம். இந்த ஆண்டு மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை 7 கட்டங்களாக நடந்தது. இதனால் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் முன்னதாகவே நடத்தி முடிக்கப்பட்டன.

இதேபோல், அனைத்து வகுப்புகளுக்கும் முன்னதாகவே தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. பல தனியார் பள்ளிகளில் ஏப்ரல் மாதத்திலே விடுமுறை விடப்பட்டது. அதைத் தொடர்ந்து அரசு பள்ளிகளுக்கும் வழக்கத்தைவிட 2 வாரங்களுக்கு முன்னதாகவே விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில், கோடை விடுமுறைகள் முடிந்து வழக்கமாக ஜூன் மாதம் முதல் தேதியிலே பள்ளிகள் துவங்குவது வழக்கம் அந்த வகையில், இந்த வருடம் முதல் வாரநாளான ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனினும், இந்த ஆண்டு வெயில் கடுமையாக இருப்பதால் பள்ளிகளுக்கு மேலும் 2 வாரம் விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் பள்ளிகல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்தது.

இதைத்தொடர்ந்து, பள்ளிகளுக்கு மேலும் 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதாக வதந்திகள் பரவியது. இதனால், பெற்றோர்களும், மாணவர்களும் உற்சாகமாக காணப்பட்டனர். மேலும், சொந்த ஊர் சென்றவர்கள் மேலும் சில நாட்கள் விடுமுறையில் இருக்கலாம் என்று நினைத்திருந்தனர். 

இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாணவர்களும், பெற்றோர்களும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் பள்ளிகள் திறக்கப்படும் தேதிகள் தள்ளிப்போக வாய்ப்பில்லை என்றும் ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 3-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.


 

.