This Article is From May 05, 2020

ஊரடங்கு முடியும் வரை மின் இணைப்பைத் துண்டிக்கக் கூடாது; உயர் நீதிமன்றம்

மே 18-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தவில்லை என்றாலும், தாழ்வான மின் இணைப்புகளை துண்டிக்கக் கூடாது

ஊரடங்கு முடியும் வரை மின் இணைப்பைத் துண்டிக்கக் கூடாது; உயர் நீதிமன்றம்

ஊரடங்கு முடியும் வரை மின் இணைப்பைத் துண்டிக்கக் கூடாது; உயர் நீதிமன்றம்

ஹைலைட்ஸ்

  • ஊரடங்கு முடியும் வரை மின் இணைப்பைத் துண்டிக்கக் கூடாது; உயர் நீதிமன்றம்
  • மின் துண்டிப்பு இல்லாமல் மே 6ம் தேதி வரை செலுத்தலாம் என அரசு தெரிவித்தது
  • செலுத்தக் கால அவகாசம் அளித்து அரசு முடிவு எடுக்க அறிவுறுத்தல்

ஊரடங்கு முடியும் வரை கட்டணம் செலுத்தவில்லை என்றாலும், மின் இணைப்பைத் துண்டிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், ஊரடங்கு காரணமாக தாழ்வழுத்த மின் பயனீட்டாளா்கள், தங்களது மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகை செலுத்தாமல் இருந்தால்
தாமதக் கட்டணம் மற்றும் மின் துண்டிப்பு அல்லது மறு இணைப்புக் கட்டணமின்றி மே 6-ஆம் தேதி வரை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், மின்கட்டண கவுண்டா்களுக்கு வருவதைத் தவிர்க்கும் வகையில், ஆன்லைன் மூலம் பணம் செலுத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், மே 6 ஆம் தேதிக்குள் மின் கட்டணம் இறுதிக் கெடுவை ரத்து செய்யக்கோரியும், ஜூலை 31 ஆம் தேதி வரை தாழ்வழுத்த மின் இணைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிடக்கோரியும் 'வாய்ஸ் ஆஃப் தமிழ்நாடு' அறக்கட்டளை சார்பில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. 

அந்த மனுவில், வீட்டு மின் இணைப்பு பெற்றவர்கள், விவசாயிகள், சிறு, குறு நிறுவனங்கள் ஆகியவை ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மே 6 ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்துவது என்பது சாத்தியமில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

தாழ்வழுத்த மின் இணைப்பு பெற்றுள்ளவர்களில் பெரும்பாலானோர் வருமானம் இழந்திருப்பதை தமிழக அரசும், மின்சார வாரியமும் கருத்தில் கொண்டு ஜூலை 31 ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று அறிவிக்க உத்தரவிட வேண்டுமென பிரதான கோரிக்கை வைத்திருந்தார்.

மே 6-ம் தேதிக்குள் மின் கட்டணம் செலுத்தாத இணைப்பைத் துண்டிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வினித் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு காணொலிக் காட்சி மூலம் விசாரணை நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் மே 18-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தவில்லை என்றாலும், தாழ்வான மின் இணைப்புகளை துண்டிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும், மின் கட்டணம் செலுத்தக் கால அவகாசம் அளித்து அரசு முடிவு எடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், இது தொடர்பாக மே 18 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

.