This Article is From Feb 25, 2019

மோடிக்கு கறுப்பு கொடி காட்ட வேண்டாம்! - வைகோவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை

வரும் 1ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கறுப்பு கொடி காட்ட வேண்டாம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மோடிக்கு கறுப்பு கொடி காட்ட வேண்டாம்! - வைகோவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை

அண்மையில் திருப்பூர் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வைகோ தலைமையில் கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் திருப்பூரில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக கட்சிக்கு மோடி ஓட்டுக் கேட்பதை கண்டிக்கவில்லை. பொதுக்கூட்டம் நடத்துவதை கண்டிக்கவில்லை.

தமிழகத்திற்கு அவர் செய்த கணிக்க முடியாத பல துரோகங்களை கண்டித்து, கறுப்புக் கொடி என் தலைமையில் காட்டப்படும். இன்று மட்டுமல்ல என்றும் தமிழகத்திற்கு அரசு விழாவிற்காக எப்போது மோடி வந்தாலும் என் தலைமையில் கறுப்புக் கொடி காட்டப்படும் என்று வைகோ திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகிறார் என்றால், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை, திருப்பூரில் ஈஎஸ்ஐ மருத்துவமனை உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை, ஆயிரக்கணக்கான கோடி ரூபாயிலான திட்டங்கள் இந்த திட்டங்களை துவக்கி வைத்து மக்களுக்கு அர்பணிப்பதற்காக அவர் குமரி வருகிறார்.

அதனால், தயவுசெய்து அண்ணன் வைகோ அவர்கள் இந்த நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துக்கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

.