இந்தியாவில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 16மடங்கு அதிகரித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம், நுண்ணுயிரியல் ஆய்வாளர்களின் அறிவுறுத்தல்களை மேற்கோள் காட்டியும், இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ள மதுரை எம்.பி. வெங்கடேசன், எவ்வளவு பெரிய பேராபத்தை எதிர்நோக்கியுள்ளோம் என்று தெரிகிறதா என்று கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
சில தினங்களுக்கு முன்னர், கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் ஏற்படும் இறப்புகளின் அளவையும் இந்தியாவில் நிகழும் இறப்புகளின் அளவையும் ஒப்பிட்டு எழுதியிருந்தேன். இறப்புகளைக் கட்டுப்படுத்துவதில் நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதையும் அதில் குறிப்பிட்டிருந்தேன். நமது நாட்டில் மேற்கொள்ளப்படும் சோதனைகளின் அளவு மிகக்குறைவாக உள்ளது. நைஜர், லாவோஸ் போன்ற நாடுகளைவிட நாம் குறைவான எண்ணிக்கையிலேயே சோதனைகளை மேற்கொண்டு வருகிறோம்.
இயற்கையாக நமக்குக் கிடைத்த மூன்று மாதத்தை நாம் வீணடித்துவிட்டோம். ஜனவரி 30ஆம் தேதி இந்தியாவில் முதல் தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதன் பிறகு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் நம்முடைய கவனத்தை பல தேவையற்ற விஷயங்களில் செலுத்தினோம். நம் பிரதமர் மார்ச் 22ஆம் தேதி மக்கள் ஊரடங்கைக் கடைபிடிக்கச் சொன்னபோதாவது, நாம் செய்யவேண்டியவற்றைச் செய்ய ஆரம்பித்து இருக்கவேண்டும். மார்ச் 25ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, பிறகு நீட்டிக்கவும் உத்தரவிடப்பட்டது. இன்றோடு 33 நாள்களாக உலகத்தில் எங்கேயுமே இல்லாத அளவிற்கு 130 கோடி மக்களும் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். அநேகரின் வாழ்வாதாரம் பாதிப்படைந்தாலும் அரசு சொல்லும் சமூகவிலகல் கடைபிடிக்கப்படுகிறது.
ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கான ஒரே தீர்வல்ல. இந்தக் காலத்தைப் பயன்படுத்தி சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்திருக்க வேண்டும். அது நடக்கவில்லை. "விரைவான சோதனைக்கான கருவிகள்" (rapid test kits) குறித்த தெளிவற்ற பார்வையுடன்தான் ஐசிஎம்ஆர் உள்ளது.
நேற்றுதான் PCR சோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஊரடங்கிற்குப் பிறகு, இந்தியாவில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 16மடங்கு அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை நாம் வீட்டினுள் முடங்கி இருக்கும்போதே அதிகரிக்கிறது என்றால் நாம் எவ்வளவு காலதாமதமாக ஊரடங்கை அறிவித்துள்ளோம் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.
நாடாளுமன்றமும் தமிழகச் சட்டமன்றமும் நடைபெற்றுக்கொண்டிருந்த பொழுது, கேரளா முதலவர் கொரோனா பாதிப்புகள் குறித்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து, எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை விரிவாகத் தெரிவித்துக்கொண்டிருந்தார். ஒடிஷா முதல்வர் கைகழுவுவதின் முக்கியத்துவம் பற்றி மக்களிடம் வலியுறுத்திப் பேசிக்கொண்டிருந்தார்,
நம்முடைய கவலைகளும் பயமும் ஏன் அதிகரிக்கின்றன?
கடந்த மூன்றுமாத காலத்தை, சரியாகப் பயன்படுத்தி நாமே சோதனைக் கருவிகளை உற்பத்தி செய்திருக்கமுடியும்; ஆனால், செய்யவில்லை. வெண்டிலேட்டர்களையும் சிறப்பு மருத்துவமனைகளையும் உருவாக்கி இருக்கவேண்டும். அவற்றையும் நடைமுறைப்படுத்தவில்லை. உதாரணமாக, ஊரடங்கு ஆரம்பித்து இவ்வளவு நாள்கள் கடந்த பின்னரும் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் மதுரை அரசு மருத்துவமனைக்கு ஒரு புதிய வெண்டிலேட்டர்கூட வந்துசேரவில்லை. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, நாங்கள் வாங்கிக்கொடுத்தது மட்டுமே புது வரவு.
இந்திய ரயில்வேயின் சார்பில் கோவிட் நோயாளிகளுக்கு 6800 படுக்கைகள் தயார்நிலையில் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மதுரைக்கோட்டத்தில் மருத்துவமனையாக மாற்றப்பட்ட பெட்டிகளைப் போய் பார்த்தேன். 20 வருடங்களைக் கடந்த, பழைய பெட்டிகளை மட்டுமே மாற்ற வேண்டும் என்பது வழிகாட்டுதல். அதற்கேற்ப பழைய – குளிர்சாதனம் இல்லாத – பெட்டிகளை மாற்றிவைத்துள்ளனர். “கொளுத்தும் வெயிலில் சாதாரணமாகவே ஆள் உள்ளே நிற்கமுடியவில்லையே, தற்கவச ஆடையுடன் இதற்குள் மருத்துவர்கள் எப்படி நிற்கமுடியும்?” என்று கேட்டேன். அப்பொழுதுதான் சொன்னார்கள், “இது. தனிமைப்படுத்தப்பட்டவர்களைத் தங்கவைப்பதற்கான இடந்தானே தவிர, கோவிட் மருத்துவமனை அல்ல” என்று. ஆனால், முதலில் ஊடகங்களில் வெளிவந்த வாசகங்கள் என்ன என்பதை நாம் அறிவோம். தயாரிப்புப் பணிகளிலும் தற்காத்துக் கொள்வதிலும் நாம் எந்த அளவு வேகத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதற்கான உதாரணங்களே இவை.
இந்தக் கவலைகள் எங்கிருந்து வருகின்றன?
புகழ்பெற்ற வைராலஜிஸ்ட் இயன் லிப்கின், “எதிர்காலத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும்; இப்போது வந்துள்ள கொள்ளைநோயைவிட இன்னும் மோசமான கொள்ளைநோய்களை உலகம் சந்திக்கவுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார். அப்படியெனில், நம்முடைய சுகாதாரக் கட்டமைப்புகள், அந்த நிலமைக்கு எந்தளவிற்கு ஈடுகொடுக்கப்போகின்றன?
மத்திய - மாநில அரசுகளே, மானுடத்தின் மிகமுக்கியமான காலகட்டத்தில் நாம் உள்ளோம். கடந்தகாலத்தில் வந்துசென்ற கொள்ளைநோய்களைவிட கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது.
மும்பையில் கொரோனா தொற்றியவர்களில் சுமார் 5% பேர் மரணம் அடைந்திருக்கின்றனர். இந்தப் புள்ளிவிபரம் ஐரோப்பிய நாடுகளைப் போலவோ, அமெரிக்காவைப் போலவோ இந்தியாவில் இறப்புகள் இருக்காது என்று சொல்லிவந்ததைப் பொய்யாக்கி இருக்கிறது.
உலக சுகாதார நிறுவனம் இரண்டு தினங்களுக்கு முன்னர் "கொரோனாவின் உச்சத்தை இன்னும் உலகம் பார்க்கவில்லை" என்று தெரிவித்திருப்பது கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இன்னும் எவ்வளவு காலம் நம்முடைய மருத்துவக் கட்டமைப்பால் இந்தக் கொள்ளைநோயை எதிர்கொள்ள முடியும் என்பது பெரிய கேள்விக்குறிதான். சீன நாட்டின் நோய்த்தொற்று நிபுணர் ஜாங் வென்ஹோங் தெரிவித்திருப்பது மேலும் கவலையளிக்கிறது. அவர், "இந்தியாவில் சில இடங்களில் சமூகபரவல் ஆரம்பித்துவிட்டது. அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் எந்த வழியில் பயணித்தனவோ அதே வழியில்தான் இந்தியாவும் பயணிக்கும்" என்கிறார். நாம் எவ்வளவு பெரிய பேராபத்தை எதிர்நோக்கியுள்ளோம் என்று தெரிகிறதா அரசுகளே?
நம்மிடம் இருக்கும் ஒவ்வொரு நாளும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து செயல்படுமாறு மன்றாடுகிறோம்.
இவ்வாறு மதுரை எம்.பி.வெங்கடேசன் கூறியுள்ளார்.