அவரது உடலை அடக்கம் செய்வதற்காக மயானத்திற்கு கொண்ட சென்ற போது மக்கள் சிலர் கொரோனா வைரஸ் தங்களுக்கும் பரவும் என்ற அச்சத்தில்...
ஹைலைட்ஸ்
- மருத்துவர் சைமன் கடந்த ஞாயிறு உயிரிழந்தார்
- அவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது
- இதை அடுத்து போலீஸ், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் சைமன், அதே நோய் தொற்றால் பலியானதும், அவரின் உடலை புதைக்க விடாமல் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தாக்கியதும் தமிழகத்தை உலுக்கியுள்ளது. இந்நிலையில் மருத்துவர் சைமனின் மனைவி, அவரது கடைசி ஆசை குறித்து உருக்கமான வேண்டுகோளை வைத்துள்ளார்.
மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் ஞாயிற்றுக்கிழமையன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, அவரது உடலை அடக்கம் செய்வதற்காக மயானத்திற்கு கொண்ட சென்ற போது மக்கள் சிலர் கொரோனா வைரஸ் தங்களுக்கும் பரவும் என்ற அச்சத்தில், மருத்துவரின் உடலை அங்கு அடக்கம் செய்ய விடாமல், தடுத்து நிறுத்தியதோடு, அவரைக் கொண்டு வந்த ஆம்புலன்ஸ் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தொடர்ந்து, அப்பகுதி மக்கள் மருத்துவர் சைமனின் உடலுடன் வந்தவர்கள் மீது கற்கள், பாட்டில்களையும் வீசி தாக்கியுள்ளனர். இதில், ஆம்புலன்ஸ் ஒட்டுநருடன், சில சுகாதாரத்துறை அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் போலீசாரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. அடுத்தடுத்து, இரண்டு மயானங்களிலும் அடக்கம் செய்ய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதைத் தொடர்ந்து சக மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் சிலரே, மருத்துவர் சைமனின் உடலை வேலாங்காட்டு கல்லறையில், கையாள் மண் அள்ளிப் போட்டு மூடியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 21 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்கள் மீது கலவரம் ஏற்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த சம்பவத்தைத் தானாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்றம் இது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் மருத்துவர் சைமனின் மனைவி, “என் கணவரின் உடல் சீல் போட்ட பெட்டியில்தான் புதைக்கப்பட்டுள்ளது. அதை அப்படியே எடுத்து எங்கள் முறைப்படி கீழ்ப்பாக்கத்தில் அடக்கம் செய்ய வேண்டும். இதுதான் என் கணவர் சைமனின் கடைசி ஆசை. இரு பிள்ளைகளுடன் விதவையாக இருக்கும் நான், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வைக்கும் உருக்குமான வேண்டுகோள் இது,” என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார்.