This Article is From Mar 17, 2020

“உண்மையாக தமிழகத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு..?”- கேள்வியெழுப்பும் மருத்துவர் சங்கம்

"உலகம் முழுவதும் 1.69 லட்சம் மக்களுக்கு இது பரவியுள்ளது"

“உண்மையாக தமிழகத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு..?”- கேள்வியெழுப்பும் மருத்துவர் சங்கம்

ஹைலைட்ஸ்

  • இந்தியாவில் 112 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது
  • மூவர் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளனர்
  • 3வது நபர் இன்று மரணமடைந்துள்ளார்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தமிழக அரசு சார்பில் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் இது குறித்து தொடர்ந்து ஸ்திரமாக கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்துக் கேள்வியெழுப்பியுள்ளது சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம்.

சங்கத்தின் தலைவர் மருத்துவர் ரவீந்திரநாத் இது குறித்து, “உலகம் முழுவதும் கொவிட் -19 வேகமாகப் பரவிவருகிறது. நமது நாட்டிலும் பல்வேறு பகுதிகளிலும் பரவியுள்ளது.

rjd61or

மருத்துவர் ரவீந்திரநாத்

இது மக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொவிட் -19 ஐ தடுப்பதற்கான நடவடிக்கைகளில் உலக நாடுகள் முனைப்புடன் ஈடுபட்டுள்ளன. உலகம் முழுவதும் 1.69 லட்சம் மக்களுக்கு இது பரவியுள்ளது. 6,580 பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 112 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூவர் இறந்துள்ளனர்.

கொவிட்-19ஐ தடுக்க தீவிர நடவடிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்படும் நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சை வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும். சிகிச்சை வழங்கத் தனியாக சில அரசு மருத்துவமனைகளை ஒதுக்க வேண்டும். அங்கு மருத்துவர்கள் முழு தற்பாதுகாப்பு உபகரணங்களுடன், போதிய மருந்துகள், மருத்துவ கருவிகளுடன் Treatment Protocol Training உடன் தயார் நிலையில் வைக்க வேண்டும். மற்ற நோயாளிகளின் சிகிச்சைகள் பாதிக்கப்படாமல் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா பரிசோதனைகள் மிகக்குறைவான நபர்களுக்கே செய்யப்படுகிறது. இதுவரை இந்தியாவில் 6,600 பேருக்கு மட்டுமே பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 88 பேருக்கு மட்டுமே பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இது மிகவும் குறைவு. இதனால் உண்மையாகப் பாதிக்கப்பட்டோரின் நிலவரத்தை அறிந்து கொள்ள முடியவில்லை,” எனத் தெரிவித்துள்ளார்

.