ஆங்கில செய்தித்தாளான ‘தி இந்து’-வில் இன்று வெளியான ஒரு செய்திக் கட்டுரை குறித்து நீதிமன்றத்தில் விவாதம் கிளம்பியது.
New Delhi: ரஃபேல் விவகாரம் தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பு, ‘ரஃபேல் விவகாரம் தொடர்பான சில முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன. தற்போது அது குறித்து நீதிமன்றத்தில் முறையிடும் மனுதாரர்கள், தேசிய பாதுகாப்புச் சட்டத்தை மீறுகின்றனர்' என்று பரபரப்புத் தகவலை சொல்லி வாதிட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், ‘ரஃபேல் குறித்த சில ஆவணங்கள் ராணுவ அமைச்சகத்தின் இன்னாள் அல்லது முன்னாள் ஊழியர்களால் திருடப்பட்டுள்ளன. அப்படி திருடப்பட்டவை எல்லாம் ரகசிய ஆவணங்கள். அது பொதுத் தளத்தில் இருக்கக் கூடாது' என்று கூறினார்.
ஆங்கில செய்தித்தாளான ‘தி இந்து'-வில் இன்று வெளியான ஒரு செய்திக் கட்டுரை குறித்து நீதிமன்றத்தில் விவாதம் கிளம்பியது. அதற்குத்தான் அரசு தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டுள்ளது.
நீதிமன்றத்தில் மேலும் பேசிய அட்டர்னி ஜெனரல், ‘ஆவணங்கள் எப்படி கசிந்தன என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம். ரகசிய ஆவணங்களை வைத்து, முறையிடுவது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். எனவே, ரஃபேல் விவகாரத்தில் மறு விசாரணை கோரும் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்' என்று முடித்தார்.
இந்து பத்திரிகையில், அதன் தலைவர் என்.ராம் இன்று எழுதியுள்ள கட்டுரையில், ‘ரஃபேல் ஒப்பந்தத்துக்கு பிரான்ஸ் தரப்பு, வங்கி காரன்டி கொடுக்காததால் இந்திய அரசுக்கு அதிக செலவீனம் ஆனது. 2016 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் 36 போர் விமானங்கள் வாங்க கையெழுத்திடப்பட்ட ரஃபேல் ஒப்பந்தம், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 126 விமானங்கள் வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தை விட 1,963 கோடி ரூபாய் அதிகமாகும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கூற்றுக்கு கட்டுரையில் ஆதாரமாக இந்தியப் பேச்சுவார்த்தைக் குழு, ராணுவத் துறை அமைச்சகத்துக்கு 2016, ஜூலை 21 ஆம் தேதி எழுதிய கடிதத்தை முன்வைத்துள்ளது இந்து பத்திரிகை.