கார்ப்பரேட் மற்றும் பெரு நிறுவனங்கள் குறித்து மோடி இதைப் போல் பேசுவது இது முதல் முறையல்ல. (கோப்புப் படம்)
ஹைலைட்ஸ்
- பல கார்ப்பரேட்கள் சமூக சேவையில் ஈடுபடுகின்றனர், மோடி
- நாட்டில் பலர் வரி கட்டத் தொடங்கியுள்ளனர், மோடி
- என் தலைமையிலான அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது, மோடி
New Delhi: பிரதமர் நரேந்திர மோடி, ‘பெரு நிறுவன தொழிலதிபர்களை விமர்சிப்பது நடைமுறையாகிவிட்டது. அது சரியல்ல' என்று பேசியுள்ளார்.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஐடி நிறுவன ஊழியர்கள் முன்னிலையில் பேசிய மோடி, ‘நமது நாட்டில் பெரு நிறுவன தொழிலதிபர்களையும் கார்ப்பரேட்களையும் விமர்சிப்பது நடைமுறையாகிவிட்டது. அது ஏன் அப்படி ஆனது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அது ஏற்புடையதல்ல. நான் அப்படிச் செய்ய மாட்டேன்.
ஐடி பெரு நிறுவனங்கள் சமூகத்துக்காக பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர். அவர்களின் ஊழியர்களையும் சமூகத்துக்காக ஏதாவது செய்யுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
எனது தலைமையிலான அரசு அமைந்த பின்னர் பலர் முறையாக வரி கட்டி வருகின்றனர். வரிப் பணம் முறையாக செலவு செய்யப்படுகிறது என்று மக்கள் நம்புவதால், இந்த வளர்ச்சி அடையப்பட்டுள்ளது. ஆனால், வெறுமனே வரி கட்டுவதுடன் நாட்டின் குடிமக்கள் நிறுத்திவிடக் கூடாது. இந்த சமூகத்துக்காக அவர்கள் ஏதாவது செய்ய வேண்டும். இளைஞர்கள், விவசாயிகளின் முன்னேற்றத்துக்காக சேவை செய்ய வேண்டும்.
நமது எதிர்காலம் தொழில்நுட்ப வளர்ச்சியை சார்ந்ததாகவே இருக்கும். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நாட்டின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.
எரிபொருள் விலைவாசியை சமாளிக்க நாம் மின்சார வாகனங்கள் நோக்கி நகர வேண்டியுள்ளது. இளம் தொழில் முனைவோர்கள், குறைந்த விலையில் ஓடக் கூடிய மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
அரசு என்னதான் திட்டங்கள் கொண்டு வந்தாலும், அதை மக்கள் எப்படி அரவணைத்துக் கொள்கிறார்கள் என்பதில் தான் திட்டத்தின் வெற்றி நிர்ணயிக்கப்படும். பெரும்பான்மை மக்கள் பொதுவாக மற்றவர்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் தான்.' என்று பேசினார்.
கார்ப்பரேட் மற்றும் பெரு நிறுவனங்கள் குறித்து மோடி இதைப் போல் பேசுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னர் கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி, ‘நான் கார்ப்பரேட் நிறுவன உரிமையாளர்களுடன் ஆலோசிப்பதற்கும் பேசுவதற்கும் பயப்படவில்லை. எனது எண்ணம் தெளிவாக இருக்கிறது. நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வது தான் எனது நோக்கம்' என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.