This Article is From Jan 05, 2019

அதிமுக வேட்பாளர் அறிவிப்பில் தாமதம்! - தேர்தலை கண்டு அச்சமா? ஓபிஎஸ் விளக்கம்

வேட்பாளரை அறிவிக்கவில்லை என்றால் தேர்தலை கண்டு அச்சப்படுகிறோம் என்று அர்த்தமா? என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுக வேட்பாளர் அறிவிப்பில் தாமதம்! - தேர்தலை கண்டு அச்சமா? ஓபிஎஸ் விளக்கம்

திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி, கடந்த ஆக.7 ஆம் தேதியன்று உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, கலைஞரின் மறைவு குறித்து சட்டப்பேரவை அலுவலகத்துக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக தேர்தல் துறைக்கு கலைஞரின் திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை அலுவலகம் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து வரும் 28ஆம் தேதி அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமைத்தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை 30 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் வரும் 10ம் தேதி வரை நடக்கயிருக்கிறது.

இதனிடையே முக்கிய கட்சிகளான திமுக பூண்டி கலைவாணனையும், அமமுக எஸ்.காமராஜையும் தேர்தல் வேட்பாளர்களாக நேற்று அறிவித்தது. அதிமுக வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை அதிமுக ஆட்சிமன்ற குழு கூடியது. கூட்டம் முடிந்த பின்னர் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படுவார். வேட்பாளரை அறிவிக்கவில்லை என்றால் தேர்தலை கண்டு அச்சப்படுகிறோம் என்று அர்த்தமா? எத்தனை தேர்தல் வந்தாலும் அவற்றை சந்திக்க அதிமுக அச்சப்படாது, தேர்தலை சந்திக்க அதிமுக எப்போதும் தயாராக உள்ளது என்று தெரிவித்தனர்.

.