This Article is From Aug 12, 2020

பொதுமேடையில் இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்த்தாரா? என்ன சொல்கிறார் கனிமொழி!

விமான நிலையத்தில் தமிழ்மொழி தெரிந்த பாதுகாப்புப் படையினர் பணியில் அமர்த்தப் படுவார்கள் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. 

பொதுமேடையில் இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்த்தாரா? என்ன சொல்கிறார் கனிமொழி!

பொதுமேடையில் இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்த்தாரா? என்ன சொல்கிறார் கனிமொழி!

பொதுமேடையில் தேவிலாலின் உரையை இந்தியிலிருந்து தமிழுக்கு கனிமொழி மொழிப்பெயர்த்தார் என்று எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக கனிமொழி விளக்கம் அளித்துள்ளார். 

முன்னதாக, திமுக எம்.பி கனிமொழி டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்றபோது, பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கனிமொழியிடம் இந்தியில் ஏதோ கேட்டுள்ளார். கனிமொழி தனக்கு இந்தி தெரியாது என்றும், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு கேட்டுள்ளார். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரி கனிமொழியை பார்த்து நீங்கள் இந்தியர்தானே என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கனிமொழி தனது டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதில்,‘விமான நிலையத்தில் ஒரு பாதுகாப்பு அதிகாரியிடம், இந்தி தெரியாது என்றும், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறும் கேட்டேன். அதற்கு அவர், ‘நீங்கள் இந்தியர்தானா?' எனக் கேட்டார். எப்போதிலிருந்து இந்தியராக இருப்பதென்றால், இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை உருவானது என தெரிந்து கொள்ள விரும்புகிறேன்” எனக் கூறி #hindiimposition என்கிற ஹாஷ் டேக்கையும் பதிவிட்டிருந்தார். 

இதைத் தொடர்ந்து சிஐஎஸ்எஃப் தரப்பு, ‘இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க நாங்கள் உத்தரவிட்டுள்ளோம். எந்த ஒரு குறிப்பிட்ட மொழியையும் திணிப்பது எங்கள் கொள்கை இல்லை' என்று விளக்கம் அளித்தது. 

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பதிவில், "கனிமொழி அவர்களின் ட்வீட்டர் பதிவு ஒரு பொய் மொழி. ஏனெனில் தேவிலால் 1989ல் தமிழகம் வந்த போது அவரது இந்தி உரையை தமிழில் மொழிபெயர்த்தது கனிமொழி. எனவே அவருக்கு இந்தி தெரியாது என்று பொய்யுரைத்துள்ளது போல் சம்பவமே மலிவான மொழி சர்ச்சையே என்பது தெளிவு" என்று கூறியிருந்தார். 

எனினும், கனிமொழியின் கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்ளிட்டோர் தங்களுக்கும் இதுபோன்ற அனுபவம் நடந்ததாக கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி கூறும்போது, சென்னை விமான நிலையத்தில் தமிழ்மொழி தெரிந்த பாதுகாப்புப் படையினர் பணியில் அமர்த்தப் படுவார்கள் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. 

டெல்லிக்கு சென்று இத்தனை ஆண்டுகள் ஆனாலும் நான் இந்தி கற்றுக்கொள்ளவில்லை. தேவிலால் சென்னை வந்தபோது இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்க வில்லை. எந்த பொதுமேடையிலும் நான் இந்தி மொழிப்பெயர்த்ததில்லை.

அப்படி மொழி பெயர்த்திருந்தால் நிரூபியுங்கள். நான் படித்த பள்ளியில் தமிழ் ஆங்கிலம் மட்டும்தான் இருந்தது. அதைத்தான் நான் கற்றுக்கொண்டேன். இந்தி தெரிந்தால்தான் மொழி பெயர்க்க முடியும். எனக்கு இந்தி தெரியாது என்று கூறினார். 

.