This Article is From Jul 29, 2020

8 வழிச்சாலைக்கு சுற்றுச்சூழல் சான்று தேவையில்லை என்பதா? கே.எஸ்.அழகிரி கண்டனம்

நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டியை வைத்துக் கொண்டு, மக்களிடம் எந்தக் கலந்துரையாடலும் நடத்தாமல் சட்டத்தை நிறைவேற்ற முனைவது ஜனநாயக விரோதச் செயலாகும்

8 வழிச்சாலைக்கு சுற்றுச்சூழல் சான்று தேவையில்லை என்பதா? கே.எஸ்.அழகிரி கண்டனம்

8 வழிச்சாலைக்கு சுற்றுச்சூழல் சான்று தேவையில்லை என்பதா? கே.எஸ்.அழகிரி கண்டனம்

எட்டு வழிச்சாலைக்கு நிலத்தை ஆர்ஜிதம் செய்யும் முன், சுற்றுச்சூழல் சான்று தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது, ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான சேலம்-சென்னை வரையிலான 8 வழி பசுமைச் சாலைக்கு நிலம் ஆர்ஜிதம் செய்வதை எதிர்த்து 35 நில உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். மக்கள் கருத்தைக் கேட்டபின், நிலத்தை ஆர்ஜிதம் செய்யும் முன் சுற்றுச்சூழல் முன் அனுமதி பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்தச் சூழ்நிலையில், எட்டு வழிச்சாலைக்கு நிலத்தை ஆர்ஜிதம் செய்யும் முன், சுற்றுச்சூழல் சான்று தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மோடி அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறை தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில்தான் சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வரைவு, சட்டம் ஆகும் முன்பே, மக்கள் விரோத நடவடிக்கையில் மோடி அரசு இறங்கியுள்ளது.

சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020, தொழிற்சாலைகளுக்கு ஆதரவாகவும், சுற்றுச்சூழலுக்கு எதிராகவும் மாறும். தனியார் திட்டங்களுக்காக விவசாயிகள் மற்றும் தனியார் நிலத்தை அபகரிக்க மட்டுமே உதவும். இது நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது. இந்த வரைவு, உண்மையிலேயே தமிழகத்தை தாக்கத்தான் வருகிறது என்பது உச்ச நீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்த பதிலில் தெளிவாகியுள்ளது. 'யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே...” என்ற பழமொழியைத்தான், தேசிய நெடுஞ்சாலைத் துறையின் பதில் நினைவுபடுத்துகிறது.

நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டியை வைத்துக் கொண்டு, மக்களிடம் எந்தக் கலந்துரையாடலும் நடத்தாமல் சட்டத்தை நிறைவேற்ற முனைவது ஜனநாயக விரோதச் செயலாகும். இந்தியாவினுடைய இயற்கை வளங்களுக்கு இதனால் ஏற்படுகிற பாதிப்புகளை எக்காலத்திலும் மீட்கவே முடியாது. தற்போதுள்ள சூழலியல் மதிப்பீட்டுச் சட்டம் - 2006 பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டு மக்களைப் பாதுகாக்கிற வகையில் இருந்ததை தற்காலிக லாபத்திற்காக மாற்றியமைக்கக் கூடாது.

மீத்தேன் மற்றும் ஷெல் கேஸ் போன்ற திட்டங்களுக்கு விலக்கு அளித்திருப்பது ஏதோ தமிழ்நாட்டிற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட திட்டமாகவே கருத வேண்டியிருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். 

.