“அதிபர் ட்ரம்ப் தான்தோன்றித்தனமாக எதையும் கூறும் நபர் அல்ல”
ஹைலைட்ஸ்
- காஷ்மீர் விவகாரத்தில் என்னை தலையிடுமாறு மோடி கேட்டார்: ட்ரம்ப்
- பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்பிடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை: ஜெய்ஷங்கர்
- பதன்கோட் தாக்குதலுக்கு பின் பாக் உடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தவில்லை
Washington: காஷ்மீரில் நிலவிவரும் ஸ்திரத்தன்மையற்ற நிலையை சரிசெய்ய பிரதமர் நரேந்திர மோடி என்னிடம் உதவி கேட்டுள்ளார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பிரதமர் மோடி அப்படியெல்லாம் ட்ரம்பிடம் கோரிக்கை வைக்கவில்லை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது. இந்த விவகாரம் தேசிய அளவில் பேசு பொருளாக மாறியுள்ள நிலையில், அதிபர் ட்ரம்பின் ஆலோசகர்களில் ஒருவர், “அதிபர் ட்ரம்ப் தான்தோன்றித்தனமாக எதையும் கூறும் நபர் அல்ல” என்று கூறியுள்ளார்.
டரம்பின் தலைமை பொருளாதார ஆலோசகரான லாரி குட்லோ, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், “காஷ்மீர் விவகாரத்தில் ட்ரம்ப், தான் நினைத்ததைப் பேசிவிட்டாரோ?” என்று கேட்கப்பட்டது.
இதற்கு சீற்றமடைந்த குட்லோ, “இது ஒரு அத்துமீறும் கேள்வி. அதிபர், தனக்குத் தோன்றுவதையெல்லாம் சொல்லக் கூடிய நபர் அல்ல” என்று படபடத்தார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இதைப் போன்று சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது புதியதல்ல. நேற்று அவர், “ஜப்பானில் ஜி20 மாநாடையொட்டி நானும் இந்திய பிரதமர் மோடியும் சந்தித்துப் பேசினோம். அப்போது, காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யுமாறு என்னைக் கேட்டுக் கொண்டார்” என்றார்.
இதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், “அதிபர் ட்ரம்ப் கூறுவது போன்ற எந்த கோரிக்கையும் அவரிடம் வைக்கப்படவில்லை.
பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்பிடம் காஷ்மீர் குறித்து எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்று இரு அவைகளுக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” என்று நாடாளுமன்றத்தில் விளக்கம் கொடுத்தார்.