This Article is From Jul 23, 2019

மத்தியஸ்தம் செய்ய அமெரிக்காவிடம் உதவி கேட்கவில்லை: டிரம்புக்கு இந்தியா பதிலடி

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு திங்கள்கிழமையன்று, வெள்ளை மாளிகையில் விருந்தளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நீங்கள் கேட்டுக்கொண்டால் இந்தியா, பாகிஸ்தான் உறவுகளில் அமெரிக்கா தலையிட்டு மத்தியஸ்தம் செய்யும் என்று கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரதமர் மோடி.

ஹைலைட்ஸ்

  • காஷ்மீரில் எந்த மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்திற்கும் இந்தியா எதிராக உள்ளது
  • மத்தியஸ்தராக செயல்பட விரும்பிகிறேன் என டிரம்ப் கூறியிருந்தார்.
  • அப்படி எந்த கோரிக்கையையும் விடுக்கவில்லை என இந்தியா விளக்கம்
New Delhi:

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்து வைக்க அமெரிக்காவின் உதவியை இந்திய பிரதமர் மோடி கேட்டதாக டிரம்ப் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு திங்கள்கிழமையன்று, வெள்ளை மாளிகையில் விருந்தளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நீங்கள் கேட்டுக்கொண்டால் இந்தியா, பாகிஸ்தான் உறவுகளில் அமெரிக்கா தலையிட்டு மத்தியஸ்தம் செய்யும் என்று கூறியுள்ளார்.

மேலும், இரு நாட்டுக்கு இடையே, மத்தியஸ்தராக செயல்பட விரும்பிகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். 


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் நடந்த சந்திப்பில் பேசிய டிரம்ப், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இந்திய பிரதமர் மோடியை சந்தித்தபோது, இந்த விவகாரம் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம், அப்போது, அவர் என்னிடம் நீங்கள் ஒரு மத்தியஸ்தராக அல்லது நடுவராக இருக்க விரும்புகிறீர்களா? என்று மோடி என்னிடம் கேட்டுக்கொண்டார். 

நான் எதில் என்றேன், காஷ்மீர் என்றார். இந்த விவகாரம் நீண்ட வருடங்களாக நடந்து வருகிறது. அதனால், அவர்கள் இதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என நினைக்கின்றனர். நீங்களும் இந்த விவகாரம் முடிவுக்கு வர வேண்டும் என நினைக்கீறிர்களா என்று அவர் இம்ரான்கானிடம் கேட்டுள்ளார். மேலும், என்னால் உதவி செய்ய முடிந்தால், மத்தியஸ்தராக செயல்பட விரும்பிகிறேன் என டிரம்ப் கூறியுள்ளார். 

மேலும், இம்ரான் கானுடனான சந்திப்பில், பயங்கரவாத ஒழிப்பு, நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசிக்கொண்டனர். 

இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறும்போது, காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய முன் வந்தால் பாகிஸ்தான் அதை வரவேற்கும் எனத் தெரிவித்தார்.

இதற்கிடையில் இவ்விவகாரத்தில் இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது ட்விட்டரில் விளக்கம் ஒன்றை வெளியிட்டார். அதில் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்து வைக்கும் படி டிரம்ப்பிடம் பிரதமர் மோடி ஒரு போதும் கேட்டுக்கொள்ளவில்லை என ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானுடன் உள்ள பிரச்னைகளை இரு நாடுகளும் தங்களுக்குள் மட்டுமே பேச வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருப்பதாக ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் பிரகடனம் அடிப்படையிலேயே இரு நாட்டு பிரச்னைகளுக்குகான தீர்வு இருக்கும் என்று அந்த ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது. 


 

.