தாக்குதலுக்குப் பயன்படுத்தப்ப ஆயுதங்கள் ஈரானில் உற்பத்தி செய்யப்பட்டவை என்று கூறப்படுகிறது
Washington: சவுதி அரேபியாவில் அரசுக்குச் சொந்தமான எண்ணெய் உற்பத்தி ஆலையான சவுதி அரம்கோ எண்ணெய் புக்கியாக் மீது, சில நாட்களுக்கு முன்னர் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் உலக அளவில் கச்சா எண்ணெய் கிடைப்பதில் பெரும் குழப்பம் எழுந்துள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்.
“நடந்தவைகளை வைத்துப் பார்க்கும்போது, ஈரான்தான் தாக்குதலுக்குக் காரணம் என்று தெரிகிறது. எங்களுக்கு அது குறித்து உறுதிபட தெரியும் என்றாலும், அதற்கான ஆதாரங்கள் விரைவில் கிடைக்கும். அது குறித்தான துள்ளியமான தகவல்கள் விரைவில் உங்களுக்குக் கிடைக்கும்.
இவை அனைத்தையும் சொன்ன பின்னரும் போரைத் தவிர்க்க வேண்டும் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம். யாருடனும் போர் வேண்டாம் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம். ஆனால், எதற்கும் நாங்கள் தயாராகவும் இருக்கிறோம்.
மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் நட்பு நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவற்றுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அதேபோல இந்தப் பிரச்னை குறித்து ஐரோப்ப நாடுகளுடனும் பேசி வருகிறோம்.
இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை ஒரு விஷயத்தை என்னால் உறுதிபட சொல்ல முடியும். நடந்தது மிகப் பெரும் தாக்குதல் ஆகும். அதைவிட பன்மடங்கு பெரிய தாக்குதலை எங்களால் நடத்த முடியும்” என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விரிவாக பேசினார் அதிபர் ட்ரம்ப்.
சவுதி எண்ணெய் நிறுவனத்தின் மீது தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து அமெரிக்க தரப்பு எதற்கும் தயாராகி வருவதாக அந்நாட்டு ராணுவத் துறை அமைச்சர் மைக் எஸ்பர் கூறியிருந்தார். அவர் கருத்து கூறிய பின்னர்தான் ட்ரம்ப், செய்தியாளர்களை சந்தித்தார்.
எண்ணெய் நிறுவன தாக்குதலுக்கு ஈரான் அரசு ஆதரவுடைய, ஏமன் நாட்டில் செயல்பட்டு வரும் ஹூதி அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆனால், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்ப ஆயுதங்கள் ஈரானில் உற்பத்தி செய்யப்பட்டவை என்று கூறப்படுகிறது. இதனால், இந்த தாக்குதலை நிகழ்த்தியது யார் என்பது குறித்த சந்தேகம் நிலவி வருகிறது.