இதுவரை உலகளவில் 3,00,000 பேர் கொரானா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
ஹைலைட்ஸ்
- உலகிலேயே அமெரிக்காதான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது
- கொரோனா வைரஸ் சீனாவின் உஹானிலிருந்து பரவியது
- அமெரிக்காவுக்கு அடுத்து ரஷ்யாவில் அதிக கொரோனா பாதிப்பு உள்ளது
Washington: உலகிலேயே அமெரிக்காவில்தான் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளார்கள். அந்நாட்டில் இதுவரை 15 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அமெரிக்கா, அதிக கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டதனால்தான் உலகிலேயே அதிக பாதிப்பு இருப்பதாக முடிவுகள் வந்துள்ளது. இது எங்களுக்குப் பெருமைதான் என்று கூறியுள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப். இதுவரை உலகளவில் 3,00,000 பேர் கொரானா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 91,000 பேர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளனர்.
“அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதாக வரும் செய்திகளை நான் நல்ல விதத்தில்தான் பார்க்கிறேன். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது அமெரிக்காவில் அதிக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது என்றுதானே அர்த்தம். இதை நான் ஒரு பெருமையாகவே பார்க்கிறேன்,” என இவ்விவகாரம் குறித்து கேபினட் சந்திப்பின் போது பேசியுள்ளார் டிரம்ப்.
அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மையம் அளிக்கும் தகவல்படி, இதுவரை அந்நாட்டில் 1.26 கோடி கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் அந்நாட்டின் ஜனநாயக தேசிய கமிட்டி, “அமெரிக்காவில் 15 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது, அதிபர் டிரம்பின் தலைமைப் பண்பின்மையைக் காட்டுகிறது,” என விமர்சித்துள்ளது. அமெரிக்காவில் வரும் நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. குடியரசுக் கட்சி சார்பில் டிரம்ப், மீண்டும் அதிபர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.
தற்போது பிரேசில் உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளில் அதிக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. இதனால் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குச் செல்வதற்குப் பயணத் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரேசில் நாட்டில் மட்டும் 2,71,000 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து பிரேசிலில்தான் அதிக கொரோனா பாதிப்பு உள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் தரவுகள்படி, ரஷ்யாவில் 3,08,000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)