This Article is From Aug 21, 2019

‘மதம்தான் பெரிய பிரச்னை…’- மீண்டும் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

Donald Trump Kashmir Issue: திங்கட்கிழமை பிரதமர் மோடியுடன் ட்ரம்ப், சுமார் 30 நிமிடம் தொலைபேசி மூலம் பேசினார்.

Donald Trump Kashmir: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் கடும் அதிருப்தியில் இருக்கும் பாகிஸ்தான் இந்த விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளது. 

ஹைலைட்ஸ்

  • காஷ்மீர் மிக சிக்கலான பகுதி- ட்ரம்ப்
  • ட்ரம்ப், நேற்று இம்ரான் கான், மோடியுடன் பேசியுள்ளார்
  • பிரதமர் மோடியுடன், ட்ரம்ப் 30 நிமிடம் தொலைபேசியில் பேசியுள்ளார்
Washington:

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோரோடு தொலைபேசி மூலம் உரையாடியதைத் தொடர்ந்து, காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வது குறித்து மீண்டும் பேசியுள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் சுமூக தீர்வு காணும் நோக்கில் உதவ, தான் தயார் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். 

“காஷ்மீர் மிகவும் சிக்கலான பகுதி. அங்கு இந்துக்களும் முஸ்லிம்களும் உள்ளனர். இருவரும் ஒற்றுமையாக இருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. இந்த விவகாரத்தில் என்னால் முடிந்தவரை மத்தியஸ்தம் செய்ய முயல்வேன். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் இரு நாடுகள் கடந்த பல ஆண்டுகளாக நல்ல நட்புறவுடன் இருக்கவில்லை. வெளிப்படையாக செல்வதென்றால் அங்கு அபாயகரமான நிலைதான் உள்ளது” என்று வெள்ளை மாளிகளையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். 

இன்னும் ஒரு சில நாட்களில் ஜி7 மாநாடு நடக்க உள்ளது. அந்த மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். அப்போது காஷ்மீர் விவகாரம் குறித்து மோடியிடம் பேசுவேன் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். 

செய்தியாளர்கள் சந்திப்பில் ட்ரம்ப், மேலும் பேசுகையில், “காஷ்மீர் விவகாரத்தில் முடிந்தவரை உதவி செய்யத்தான் பார்க்கிறோம். ஆனால் சம்பந்தப்பட்டுள்ள இரு நாடுகளுக்கும் இடையில் அதிக பிரச்னைகள் உள்ளன. இருவருடனும் நாம் நல்ல நட்புறவோடு இருக்கிறோம். ஆனால் அவர்கள் இருவரும் அப்படி இருக்கிறார்கள் என சொல்வதற்கில்லை. அந்தப் பிரச்னைக்கு மதம் முக்கிய காரணம். மதம் மிகவும் சிக்கலான விஷயம்” என்று தெரிவித்தார். 

சமீபத்தில் வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்த அதிபர் ட்ரம்ப், ‘காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய நான் தயார். அது குறித்து பிரதமர் மோடி கூட என்னிடம் உதவி கேட்டுள்ளார்' என பரபரப்புத் தகவலை தெரிவித்தார். இத்தகவலை இந்திய தரப்பு முற்றிலும் மறுத்துவிட்டது. 

திங்கட்கிழமை பிரதமர் மோடியுடன் ட்ரம்ப், சுமார் 30 நிமிடம் தொலைபேசி மூலம் பேசினார். அப்போது அதிபர் ட்ரம்ப், ‘காஷ்மீர் விவகாரத்தில் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் நடவடிக்கை எடுங்கள்' என்று தெரிவித்தாராம். பிரதமர் மோடி தரப்பில், ‘இந்தியாவுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் சில தலைவர்கள் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது' என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் தரப்பிடம் ட்ரம்ப், ‘ஆக்ரோஷமாக பேசுவதை தவிர்த்துவிடுங்கள்' என்று அறிவுரை கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் கடும் அதிருப்தியில் இருக்கும் பாகிஸ்தான் இந்த விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளது. 

முன்னதாக பாகிஸ்தான், ஐ.நா. சபையில் இந்த விவகாரத்தை கொண்டு சென்றது. அங்கு பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற கூட்டத்தில் சீனாவைத் தவிர்த்து மற்ற எந்த நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கவில்லை.

இதனால் பாகிஸ்தான் கொண்டு வந்த தீர்மானம் தோல்வியைத் தழுவியது. இந்த நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கையாக காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்குப் பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
 

(PTI மற்றும் AFP அளித்த தகவல்களுடன் எழுதப்பட்டது)

.