This Article is From Sep 16, 2019

அமெரிக்கா சென்று ‘Howdy, Modi’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர்; அதிபர் ட்ரம்பும் இணைகிறார்!

'Howdy, Modi': பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவில் இந்த மாத 28 ஆம் தேதி வரை இருப்பார்.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் கடந்த சில மாதங்களாக சரியான வர்த்தக உறவு இருக்கவில்லை.

New Delhi:

இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்துக்குச் சென்று, ‘ஹவுடி, மோடி' (Howdy, Modi) என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் (Donald Trump) கலந்து கொள்வார் என்று வெள்ளை மாளிகை அதிகாரபூர்வத் தகவலை தெரிவித்துள்ளது. இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பின் மூலம், “உலகின் மிகப் பழைய மற்றும் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் மேம்படும்” என்று தெரிவித்துள்ளது வெள்ளை மாளிகளை தரப்பு.

டெக்சாஸில் உள்ள ஹூஸ்டனின் என்.ஆர்.ஜி ஸ்டேடியத்தில் ‘ஹவுடி, மோடி' நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் சுமார் 50,000 பேர் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டனவாம். செப்டம்பர் 22 ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடக்கிறது. 

“ஹூஸ்டனில் நடக்கும் நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் கலந்து கொள்வார். இந்த சந்திப்பின் மூலம் இரு நாட்டு உறவிலும், வர்த்தகம் மற்றும் ஆற்றல் துறையில் நட்புறவை வளர்த்துக் கொள்ள முடியும்” என்று குறிப்பிட்டுள்ளது வெள்ளை மாளிகை.

அதிபர் ட்ரம்பை தவிர, அமெரிக்க ஹவுஸ் மெஜாரிட்டி தலைவர் ஸ்டேனி ஹோயர், ஆளுநர்கள், காங்கிரஸ் உறுப்பினர்கள், மேயர்கள், பொதுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் ‘ஹவுடி, மோடி' நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். 

27snceb

எரிவாயு துறையில் இந்தியா - அமெரிக்காவுக்கு இடையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் கடந்த சில மாதங்களாக சரியான வர்த்தக உறவு இருக்கவில்லை. தற்போது நடைபெற உள்ள நிகழ்ச்சி மூலம் இரு நாட்டுக்கும் இடையிலான வர்த்தக உறவு சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவில் இந்த மாத 28 ஆம் தேதி வரை இருப்பார். அங்கு நடக்கவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் அவர் உரையாற்றுவார். 27 ஆம் தேதி பிரதமர் மோடியின் உரைக்குப் பின்னர்தான், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உரையாற்ற இருக்கிறார். 

ஜம்மூ காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் இம்ரான் கான் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி நடந்த ஜி7 உச்சி மாநாட்டின் போது பிரதமர் மோடியும், அதிபர் ட்ரம்பும் நேரில் சந்தித்துப் பேசினார்கள். ட்ரம்ப், காஷ்மீர் விவகாரம் மிகவும் அபாயமான கட்டத்தில் இருப்பதாகவும் அதில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்றும் தெரிவித்திருந்தார். 

.