This Article is From Aug 17, 2019

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா- பாக்., பேச்சுவார்த்தை வேண்டும்: வலியுறுத்தும் ட்ரம்ப்!

ஆகஸ்ட் 5 ஆம் தேதி, இந்திய அரசு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப் பிரிவான 370-ஐ ரத்து செய்தது.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா- பாக்., பேச்சுவார்த்தை வேண்டும்: வலியுறுத்தும் ட்ரம்ப்!

ஜம்மூ காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவும் உத்தரவிட்டது இந்திய அரசு

ஹைலைட்ஸ்

  • இம்ரான் கானுக்கு, ட்ரம்ப் போன் அழைப்பு செய்துள்ளார்
  • இம்ரான் கான், காஷ்மீர் விவகாரம் குறித்து ட்ரம்பிடம் பேசியுள்ளார்
  • பாகிஸ்தான் - இந்தியாவுடன் இந்த விஷயம் பற்றி பேச வேண்டும்- ட்ரம்ப்
New Delhi:

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனான தொலைபேசி அழைப்பின்போது ட்ரம்ப், இதை வலியுறுத்தியுள்ளார். 

கடந்த திங்கட் கிழமை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து ஜம்மூ காஷ்மீர் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த விவகாரம் ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சில் வரைக் கூட சென்றது. இது தொடர்பாக நேற்று ஆலோசனை நடத்தியுள்ளது ஐ.நா சபை.

இந்த ஆலோசனையைத் தொடர்ந்து பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் மெஹ்மூத் குரேஷி, “இரு தரப்பும் காஷ்மீர் குறித்து விரிவாக பேசினோம். காஷ்மீர் விவகாரம் குறித்து வேண்டிய தகவல்களைப் பறிமாறிக் கொள்ளவும் உடன்பட்டுள்ளோம். காஷ்மீரில் சமீப காலமாக நடந்து வரும் நடவடிக்கைகளும், அதனால் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இருக்கும் பிரச்னை குறித்தும் இம்ரான் கான் கவலை தெரிவித்துள்ளதை எடுத்துரைத்துள்ளோம்” என்று ரேடியோ பாகிஸ்தானிடம் தகவல் தெரிவித்துள்ளார். 

ஐ.நா சபையில் பூட்டிய அறையில் இந்த ஆலோசனையானது நடைபெற்றது. பாகிஸ்தானுடன் நெருக்கமாக இருக்கும் சீன அரசு, ஐ.நா-விடம் வலியுறுத்தியதைத் தொடர்ந்து மிகவும் அரிதான பூட்டிய அறை ஆலோசனை நடந்தது. 

ஆகஸ்ட் 5 ஆம் தேதி, இந்திய அரசு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப் பிரிவான 370-ஐ ரத்து செய்தது. மேலும் ஜம்மூ காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவும் உத்தரவிட்டது. இந்த நடவடிக்கைக்குப் பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்து, அந்நாட்டிலிருந்த இந்தியத் தூதரையும் வெளியேற்றியது. மேலும் இந்தியாவுடனான நட்புறவையும் துண்டித்தது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா, “காஷ்மீர் விவகாரத்தில் இப்போது எடுக்கப்பட்டிருப்பது உள் நாட்டு நடவடிக்கை. அதில் பாகிஸ்தான் தலையிடக் கூடாது. நிதர்சனத்தை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும்” என்று பதில் கூறியது. 

(ஏஜென்சிகள் அளித்த தகவல்படி எழுதப்பட்டது)

.