இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
Washington: இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மத சுதந்திரம் தொடர்பாகப் பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்துவார் என அதிபர் அலுவலகமாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியம் மற்றும் அமைப்புகளின் மீது அமெரிக்க பெரும் மரியாதை வைத்திருப்பதாகவும் வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.
ட்ரம்பின் இந்தியப் பயணம் குறித்து அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
இந்தியாவும், அமெரிக்காவும் ஜனநாயக பாரம்பரியம் மற்றும் மத சுதந்திரத்தைக் கொண்டுள்ளன. இதுபற்றி பொதுவெளியில் ட்ரம்ப் பேசியுள்ளார். மோடியிடமும் இதுபற்றி ட்ரம்ப் பேசுவார். பல்வேறு பிரச்சினைகள்,குறிப்பாக மத சுதந்திரம் தொடர்பாக முக்கியமாகப் பேசப்படும். இந்த விவகாரம் அமெரிக்க நிர்வாகத்திற்கு முக்கியமான ஒன்றாகும்.
இந்திய ஜனநாயக பாரம்பரியம் மற்றும் அமைப்புகளின் மீது அமெரிக்கா பெரும் மரியாதை வைத்துள்ளது. இவற்றை நிலை நிறுத்துவதற்காக இந்தியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும்.
குடியுரிமை சட்டத்திருத்தம், என்.ஆர்.சி. விவகாரங்களை அமெரிக்கா கவனத்தில் கொள்ளும்.
இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடியுடன் அதிபர் டெனால்டு ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்துவார் எனக் கருதுகிறேன். ஜனநாயக பாரம்பரியம், சிறுபான்மை மதங்களின் மீது மரியாதை போன்றவற்றை இந்தியா மேற்கொள்கிறது. இதனை இந்தியா தொடர வேண்டும் என உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன.
மத சுதந்திரம், சிறுபான்மையின மதங்களின் மீது மரியாதை அளித்தல், அனைத்து மத மக்களையும் சமமாக நடத்த வேண்டும் ஆகியவற்றை இந்திய அரசியலமைப்பு சட்டமே சொல்கிறது. எனவே, மத சுதந்திரம் குறித்து மோடியிடம் ட்ரம்ப் நிச்சயம் பேசுவார்.
இந்திய வளமையான மொழி, மாறுபட்ட கலாச்சாரம், மதங்களைக் கொண்ட நாடு.
உலகில் பின்பற்றப்படும் 4 முக்கிய மதங்கள் இந்தியாவில்தான் பிறந்திருக்கின்றன.
கடந்த ஆண்டு பிரதமர் மோடி தேர்தலில் வெற்றி பெற்றபோது முதன்முறையாகப் பேசினார். அதில் சிறுபான்மையின மக்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். மத சுதந்திரம் அளிப்பது, அனைவரையும் சமமாகப் பார்ப்பது என்ற இந்தியாவின் பண்புகள் தொடர வேண்டும் என்றுதான் உலக நாடுகள் விரும்புகின்றன.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் குடியுரிமை சட்டத் திருத்தம், என்.ஆர்.சி. குறித்து மோடியிடம் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்துவாரா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அமெரிக்க அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர்.
இந்தியாவில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்தும், அதனைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த சட்டம் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரானது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்திருத்தத்தின்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து 2015-க்கு முன்பாக இந்தியாவுக்கு வந்த சிறுபான்மையினர் அல்லாதோருக்குக் குடியுரிமை வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.