கெரியா விமான நிலையத்திலிருந்து தாஜ் மஹாலை வரையிலான சாலைகள் புதுப்பிக்கப்படுகின்றன.
Agra: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் வருகையையொட்டி தாஜ்மஹால் கூடுதல் அலங்காரப்படுத்தப்படுகிறது. கெரியா விமான நிலையத்திலிருந்து தாஜ்மஹால் வரையிலான சாலை புதுப்பிக்கப்பட்டு வருவதாக ஆக்ரா மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநகர ஆணையர் அருண் குமார் கூறுகையில்,'பிப்ரவரி 24-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆக்ராவுக்கு வரவுள்ளார். இதனால் கெரியா விமான நிலையத்திலிருந்து தாஜ்மஹால் வரையிலான சாலைகள் சீரமைக்கப்படுகின்றன ' என்று தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 2 நாட்கள் சுற்றுப் பயணமாகப் பிப்ரவரி 24-ம்தேதி இந்தியாவுக்கு வருகிறார்.
வெளியுறவு அமைச்சகம் அளித்த தகவலின்படி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மோதிரா மைதானத்தில் நடைபெறவுள்ள பிரமாண்ட நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். கடந்த ஆண்டு ஹவுஸ்டனில் 'ஹவுடி மோடி' என்ற நிகழ்ச்சியைப் போன்று இந்த விழா நடைபெறும்.
ட்ரம்ப்பின் இந்தியப் பயணத்தின்போது அவரது மனைவி மெலானியாவும் உடன் வருகிறார். முதலில் டெல்லிக்கு வரும் அவர்கள், அரசு மரியாதையை ஏற்றுக் கொண்ட பின்னர் அகமதாபாத்துக்குச் செல்கின்றனர். அங்கு இந்தியாவின் பல்வேறு சமூக மக்களிடம் கலந்துரையாடவுள்ளனர்.
சமீபத்தில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் தொலைப்பேசியில் பேசிக்கொண்டனர். அப்போதுதான் பிரதமர் மோடி இந்தியா வருமாறு ட்ரம்ப்புக்கு அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று ட்ரம்ப் இந்தியா வருகிறார்.
மோடி - ட்ரம்ப் சந்திப்பின்போது இரு தரப்பு உறவுகள், இந்தியா - அமெரிக்கா மக்களிடையிலான உறவுகள் உள்ளிட்டவை குறித்துப் பேசப்படவுள்ளது.