This Article is From Jan 02, 2020

மோடிக்கு சேவகம் செய்ய பொங்கல் தேதியை மாற்றிவிடாதீர்கள்: மு.க.ஸ்டாலின் கண்டனம்

இதோ 20ஆம் தேதி மாணவர்களுக்காகப் பேசப் போகிறாராம் பிரதமர். அவருக்குச் சேவகம் செய்து மகிழ்விப்பதற்காக, தொன்மையான பொங்கல் திருநாள் தேதியை மாற்றிவிடாதீர்கள் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

மோடிக்கு சேவகம் செய்ய பொங்கல் தேதியை மாற்றிவிடாதீர்கள்: மு.க.ஸ்டாலின் கண்டனம்

தமிழர் பண்பாட்டு விழாவை, உங்கள் பதவி ஆசையைத் தீர்க்கும் பாதம் தாங்கும் விழாவாக மாற்றிவிட வேண்டாம்

பிரதமருக்கு சேவகம் செய்து மகிழ்விப்பதற்காக, தொன்மையான பொங்கல் திருநாள் தேதியை மாற்றிவிடாதீர்கள் என தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

பள்ளி மாணவர்கள் எந்தவித மன அழுத்தமும் இன்றி தேர்வுகளை எழுதும் வகையில் அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடி வருகிறார். மூன்றாவது ஆண்டாக பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியை, வரும் 16-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது.

டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றும் உரையை கண்டுகளிக்க அன்றைய தினம் பள்ளிகளுக்கு வர வேண்டும் என்று 9 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், மாணவர்கள் வர வேண்டியது கட்டாயமில்லை என்று அரசு விளக்கம் அளித்தது.

இதனிடையே, மகர சங்கராந்தி, லோரி உள்ளிட்ட பண்டிகைகளால் வேறு பல மாநிலங்களிலும் 16-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. எனவே அந்த மாநிலங்களை சேர்ந்த மாணவர்களை பங்கேற்க வைப்பதிலும் சிரமம் ஏற்பட்டது.

இந்நிலையில், பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி, 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தென்மாநிலங்களில் பொங்கல், மகர சங்கராந்தி உள்ளிட்ட திருவிழாக்களுக்காக விடுமுறை விடப்பட்டுள்ளதால், பிரதமரின் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் கூறியதாவது, 

பிரதமர் பேசப்போகிறார்' என்று தமிழர் திருநாளாம் மாட்டுப் பொங்கல் நாளன்று பள்ளிக்கு மாணவர்களை வரவழைத்து, மத்திய பாஜக அரசிடம் தொடர்ந்து குளிர்காய நினைத்த, அதிகார அநியாயத்தைக் கண்டித்துப் போராட்டம் அறிவித்தேன். உடனடியாகப் பூசிமெழுகும் காரணம் சொன்னது எடப்பாடி அரசு. 

இதோ 20ஆம் தேதி மாணவர்களுக்காகப் பேசப் போகிறாராம் பிரதமர். அவருக்குச் சேவகம் செய்து மகிழ்விப்பதற்காக, தொன்மையான பொங்கல் திருநாள் தேதியை மாற்றிவிடாதீர்கள் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். தமிழர் பண்பாட்டு விழாவை, உங்கள் பதவி ஆசையைத் தீர்க்கும் பாதம் தாங்கும் விழாவாக மாற்றிவிட வேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

.