This Article is From Jan 18, 2020

கூட்டணி பற்றி பொதுவெளியில் கருத்துக்கூற வேண்டாம் –காங்.,திமுகவினருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டிருந்த அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இரு கட்சியினரும் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இன்று கே.எஸ். அழகிரி, திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

கூட்டணி பற்றி பொதுவெளியில் கருத்துக்கூற வேண்டாம் –காங்.,திமுகவினருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

திமுக மற்றும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

கூட்டணி குறித்து பொது வெளியில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று திமுக மற்றும் காங்கிரஸ் தொண்டர்களை திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-


தமிழகத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த, 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகமும் - அதன் கூட்டணிக் கட்சிகளும் மக்களின் ஆதரவைப் பெற்று மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் இடங்கள் குறித்து கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள், அவர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்தி - வெற்றி வாய்ப்புள்ள பகுதிகளின் அடிப்படையில் இடங்களைப் பகிர்ந்து கொள்வது என்று தெரிவிக்கப்பட்டு - அவ்வாறே மாவட்ட அளவில் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று, இடங்கள் ஒதுக்கீடு செய்து கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் கழகத்தின் தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.

மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த இடங்களே வழங்கப்பட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு கே.எஸ். அழகிரி அவர்கள் “வெளிப்படையாக” ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

சுமுகமாகப் பேசித் தீர்த்திருக்க வேண்டிய மறைமுகத் தேர்தல் இடப் பங்கீடு குறித்து, அறிக்கை மூலம் பொது வெளிக்குக் கொண்டு சென்றது, கடந்த சில நாட்களாக இரு தரப்பிலும் விரும்பத்தகாத கருத்துப் பரிமாற்றத்திற்கு வழி வகுத்துள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மனப்பாங்கினை உணர்ந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் திரு கே.எஸ். அழகிரி அவர்கள் “தி.மு.க. - காங்கிரஸ் இடையே எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது” என்றும், “மதவாத, பாசிச சக்திகளையும் அவர்களை ஆதரித்து கைப்பாவைகளாகச் செயல்பட்டு வருபவர்களையும் எதிர்த்து தி.மு.கழகம் மேற்கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆதரவளித்து துணை நிற்கும்” என்றும் அறிக்கை வாயிலாகவும், பேட்டிகள் வாயிலாகவும் ஆக்கபூர்வமாகத் தெரிவித்துள்ளார். இன்று அண்ணா அறிவாலயத்தில் என்னை நேரில் சந்தித்து இதுகுறித்து பேசியும் உள்ளார்.

ஆகவே கூட்டணி தொடர்பாக ஏதோ ஒரு சில இடங்களில் இருதரப்பிற்கும் ஏற்பட்ட சில நிகழ்வுகளை முன் வைத்து- இரு தரப்புமே இந்த விவாதத்தை மேலும் பொதுவெளியில் நடத்திக் கொண்டிருப்பது- திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் சிறு ஓட்டையாவது விழாதா என்று ஏங்கித் தவிக்கும் “குள்ள நரி சக்திகளுக்கும்” “சில ஊடகங்களுக்கும்” மேலும் அசைபோடுவதற்கான செயலாக அமைவதை நான் ஒரு சிறிதும் விரும்பவில்லை.

ஆகவே விரும்பத்தகாத இத்தகைய விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், இனியும் இவ்வாறு ஏற்பட அனுமதிக்கக் கூடாது என்பதாலும், கூட்டணி குறித்த கருத்துகளை இரு கட்சியினரும் பொது வெளியில் தெரிவிப்பதை கட்டாயம் தவிர்த்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

.