This Article is From May 07, 2019

‘பாலகோட் தாக்குதல் பற்றி தெரியாது!’- பாஜக வேட்பாளரும் நடிகருமான சன்னி டியோல்

குர்தாஸ்புர் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் தினமும் டியோல், 5 மணி நேரம் வரை சாலை மார்க்க பிரசாரம் செய்து வருகிறார்.

‘பாலகோட் தாக்குதல் பற்றி தெரியாது!’- பாஜக வேட்பாளரும் நடிகருமான சன்னி டியோல்

‘சினிமாவும் அரசியலும் வேறு வேறு துறைகள். இரண்டையும் ஒரே மாதிரி அணுக முடியாது'

Gurdaspur:

இந்த நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பல நடிகர்கள், அரசியலில் குதித்துள்ளனர். அதில் பலர் நேரடியாக தேர்தலில் போட்டியிடவும் உள்ளனர். அப்படி ஒருவர்தான் 62 வயதாகும் பாலிவுட் ‘ஆக்‌ஷன் ஹீரோ' சன்னி டியோல். பஞ்சாபின் குர்தாஸ்பூர் தொகுதியில் டியோல் களம் காண்கிறார். 

தினமும் பிரசாரத்தில் பிஸியாக இருக்கும் டியோலுடம் பேசினோம், ‘சினிமாவும் அரசியலும் வேறு வேறு துறைகள். இரண்டையும் ஒரே மாதிரி அணுக முடியாது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக மோடிஜி, சிறப்பான பணியை செய்துள்ளார். அவர் தொடர்ந்து பிரதமராக இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. தேசத்தை ஒற்றுமையாக வைத்து முன்னேற்றி எடுத்துச் செல்வதுதான் ஒரு நல்ல தலைவருக்கு அழகு' என்றார்.

அவரிடம் பாகிஸ்தான் மற்றும் நாட்டு நடப்பு பற்றி கேட்டபோது, ‘நான் அரசியலுக்குப் புதியவன். எனக்கு பாலகோட் தாக்குதல் பற்றியோ, இந்தியா - பாகிஸ்தான் உறவு பற்றியோ அதிகம் தெரியாது. நான் மக்களுக்கு சேவையாற்ற இங்கு வந்துள்ளேன். நான் வெற்றி பெற்றால், இது குறித்தெல்லாம் பதில் கூறலாம். ஆனால், இப்போதைக்கு எந்தவித கருத்தும் சொல்ல மாட்டேன்' என்று விளக்கினார்.

அரசியல் குறித்து பொதுவாக பேசிய டியோல், ‘நான் எனது நாட்டுக்காக சேவையாற்ற வந்துள்ளேன். நான் வெற்றி பெற்றால், மக்களுக்கு நல்லது செய்வேன். மக்கள் எப்போதும், அரசியல்வாதிகள் எதையும் செய்வதில்லை என்று குறை கூறுவர். அதை ஏன் மாற்றக் கூடாது என்று நினைத்தேன். அரசியலில் சேர்ந்தேன். உங்கள் கொள்கைகள் சரியாக இருந்தால், எதையும் சாதிக்க முடியும்' என்றார் நம்பிக்கையுடன்.

குர்தாஸ்புர் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் தினமும் டியோல், 5 மணி நேரம் வரை சாலை மார்க்க பிரசாரம் செய்து வருகிறார். அவரைப் பார்க்க பொதுமக்கள் அலை கடலென திரள்கின்றனர். மே 23 ஆம் தேதி சன்னி டியோல், வெற்றி பெறுவாரா என்பது தெரிந்துவிடும்.

.