மாணவர்களின் உயிரோடு விளையாடாதீர்; 10ம் வகுப்பு பொதுத்தேர்வைக் கைவிடுக;ஸ்டாலின் வலியுறுத்தல்
மாணவர்களின் உயிரோடு விளையாடாமல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு கைவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் மேலும் கூறியதாவது, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை, ஒட்டுமொத்த மாநிலத்தையும் அச்சப்பட வைக்கும் நகரமாக மாறியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். ஒருவருக்கு யாரிடமிருந்து தொற்று பரவியது என்கிற தொடக்க நிலைத் தொற்று (Primary Source) தெரியாத அளவில் சென்னையில் நாள்தோறும் பரவி வரும் நோய்த் தொற்று என்பது, சமூகத் தொற்று எனப்படும் கட்டத்தை எட்டியிருப்பதாக மருத்துவர்கள் கவலைப்படுகின்றனர்.
தமிழகத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. இறப்பு எண்ணிக்கையும் இருநூற்று ஐம்பதுக்கு மேல் சென்றுவிட்டது. கோவிட்-19 வைரஸ் தற்போது அதிக வீரியம் கொண்ட 'க்ளேட் A3i' ஆக உருமாறி பரவி வருகிறது என்கிற தகவல் மக்கள் அனைவரையும் மேலும் அச்சப்பட வைத்துள்ளது.
இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வைக் கட்டாயம் நடத்தியே தீருவது என்கிற வறட்டுப் பிடிவாதமான முடிவு, மாணவ - மாணவியரின் உயிரை வைத்து ஆட்சியாளர்கள் விளையாடுகின்ற அபாயகரமான ஆட்டமாகும்.
கடந்த சில நாட்களாக குழந்தைகள், சிறுவர் - சிறுமியர், இளைஞர்கள் எனப் பல தரப்பினருக்கும் கொரோனா நோய்த் தொற்று பரவிவருவதை அரசாங்கம் வெளியிடும் அறிக்கைகளிலிருந்தே அறிய முடிகிறது. அப்படிப்பட்ட நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது என்பது, மாணவ - மாணவியருக்கு மட்டுமின்றி, அவர்களுடைய பெற்றோர், குடும்பத்தினர், உடன்பிறந்தோர் உள்ளிட்ட அனைவருக்கும் நோய்த் தொற்று பரவ காரணமாகிவிடும் என்பதை மருத்துவர்களும் கல்வியாளர்களும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
எதிர்க்கட்சியினர் ஆலோசனை சொன்னால், இவர்கள் என்ன டாக்டர்களா? என்று ஏகடியம் பேசிய எடப்பாடி பழனிசாமி அரசு, சென்னையில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக 5 மந்திரிகள் கொண்ட குழுவை நியமித்திருக்கிறதே அவர்கள் என்ன எம்.பி.பி.எஸ். எனும் மருத்துப் படிப்பு படித்தவர்களா? அல்லது விஞ்ஞானிகளா? லண்டன் - அமெரிக்கா சென்று உயர் மருத்துவப் பட்டம் வாங்கியவர்களா? என மக்கள் கேட்கிறார்கள்.
"சொந்தப் புத்தியும் இல்லை; சொல் புத்தியும் இல்லை" என்பதுபோல நிர்வாகத் திறனற்ற எடப்பாடி திரு. பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு, கொரோனா நோய்த் தொற்றுத் தடுப்பில் முற்றிலுமாக ‘ஃபெயில்' ஆகியுள்ள நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்கள் 'பாஸா - ஃபெயிலா' என்பதையறிவதற்காக பொதுத் தேர்வு நடத்துவதில் அவசரம் காட்டுவது, அதன் அக்கறையற்ற செயல்பாட்டையே எடுத்துக் காட்டுகிறது.
மக்கள் நலன் பற்றியும் சிந்திக்காமல், மாணவர்களின் எதிர்காலம் பற்றியும் கவலைப்படாமல், உயிரைப் பறிக்கும் ‘நோய் வளர்ப்புத் திட்டத்தைச்' செயல்படுத்திக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
ஆட்சியாளர்கள் தங்களின் மறைமுக ஆதாயங்களுக்காக, மாணவர்களின் உயிருடன் விளையாட வேண்டாம் என எச்சரிக்க வேண்டியது முக்கிய எதிர்க்கட்சியின் கடமை என்று அவர் தெரிவித்துள்ளார்.