This Article is From Aug 01, 2018

ஆதார் எண்ணைப் பகிர வேண்டாம்: டிராய் தலைவரின் சவாலையடுத்து ஆதார் அமைப்பு எச்சரிக்கை

ஆதார் தகவல்கள் பற்றிய அச்ச உணர்வை ஏற்படுத்தியதற்காக ஆர்.எஸ்.ஷர்மா மன்னிப்பு கேட்க வேண்டும்" என காங்கிரஸ் உறுப்பினர் பிரதாப் சிங்க் பாஜ்வா கூறினார்

New Delhi:

புது தில்லி: தனது பன்னிரண்டு இலக்க ஆதார் எண்ணை இணையத்தில் வெளியிட்டு “முடிந்தால் எனக்கு ஏதேனும் தீங்கு விளைவியுங்கள் பார்க்கலாம்” என்று சவால் விட்டார் டிராய் அமைப்பின் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மா. இதனையடுத்து இவ்வாறான செயல்கள் ஏற்புடையதல்ல என ஆதார் ஆணைய அமைப்பு சூசகமாக அறிவுறுத்தியுள்ளது.

"இச்செயல்பாடுகள் சட்டத்திற்குப் புறம்பானவை என்பதால் தேவையற்றதும் தவிர்க்கப்பட வேண்டியதும் ஆகும்", என நேற்று மாலை ட்விட்டரில் இதுபற்றிய அறிவிப்பை ஆதார் அமைப்பு வெளியிட்டது.

திரு. ஷர்மா ஆதார் ஆணைய அமைப்பின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ஆவார்.

ஆர்.எஸ். ஷர்மாவின் சவாலை ஏற்றுப் பதிவிடப்பட்ட தகவல்கள் ஏற்கனவே பொதுத்தளத்தில் உள்ளன என ஆதார் அமைப்பு முதலில் ஷர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தது.

அனால் கடந்த இரண்டு தினங்களில் ஆதரின் பாதுகாப்புத்தன்மையை கேள்விக்குட்படுத்திய சிலர், இவரது ஆதார் எண்ணைப் பயன்படுத்தி பல்வேறு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முயன்றனர். இவரது ஆதார் அட்டையை நகல் செய்து சமூக வலைத்தளக் கணக்குகளைத் தொடங்கினர். ஒருவர் இவரது வங்கிக்கணக்கினை கண்டறிந்து அதில் ஒரு ரூபாய் செலுத்தியதாகக் கூறினார். பலர் வணிக வலைத்தளங்களில் புதிய கணக்குகளைத் தொடங்கினர்.

இந்த சவால் மற்றும் அதன்பின் நிகழ்ந்த நிகழ்வுகள் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தன. பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதாரின் பாதுகாப்புத்தன்மையைக் கேள்விக்குட்படுத்தினர்.

"ஆதார் தகவல்கள் பற்றிய அச்ச உணர்வை ஏற்படுத்தியதற்காக ஆர்.எஸ்.ஷர்மா மன்னிப்பு கேட்க வேண்டும்" என காங்கிரஸ் உறுப்பினர் பிரதாப் சிங்க் பாஜ்வா கூறினார். இதுதொடர்பான விசாரணை நடத்த வேண்டும் என சிபிஐ-இன் டி. ராஜா கேட்டுக்கொண்டார்.

ஆர்.எஸ்.ஷர்மாவின் செயலில் அதிருப்தி அடைந்து ஆதார் ஆணையத்தை தெளிவுபடுத்த மத்திய அரசு கூறியுள்ளதாகத் தெரிகிறது.

செவ்வாய்க்கிழமை ஆதார் வெளியிட்ட அறிவிப்பில் ஆர்.எஸ்.ஷர்மாவின் சவாலை ஏற்றுள்ள பாதுகாப்பு ஆர்வலர்களையும் அவர்களது முயற்சியைக் கைவிடுமாறு அறிவுறுத்தியுள்ளது.

“மற்றவரின் ஆதார் எண்ணைப் பயன்படுத்துவது ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுவதற்க்கு ஒப்பானது. இது இந்திய தண்டனைச் சட்டத்தின் படியும் ஆதார் சட்டத்தின்படியும் தண்டனைக்குரிய குற்றம்” என ஆதார் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இவ்வாறு செயல்படுபவர்களும் செயல்படத் தூண்டுபவர்களும் சட்டத்தின்படி தண்டனைகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் எனவும் ஆதார் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

ஆதார் எண்ணைப் பொதுவெளியில் பதிவிடக்கூடாது என்றும் வங்கிக் கணக்கு எண், கடவுச்சீட்டு எண், பான் கார்டு எண் போல ஆதார் எண்ணும் பாதுகாக்கப்பட வேண்டிய தனிநபர் தகவல் என்றும் முறையான அமைப்புகளுக்கு மட்டுமே அளிக்கவேண்டும் எனவும் ஆதார் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

.