This Article is From Jun 12, 2019

“கருத்து சொல்லத் தடை”- அதிமுக-வினருக்கு ‘ஸ்ட்ரிக்ட்’ உத்தரவு!

"மீறி கருத்து தெரிவிப்போர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்”

“கருத்து சொல்லத் தடை”- அதிமுக-வினருக்கு ‘ஸ்ட்ரிக்ட்’ உத்தரவு!

“அதிமுக செய்தி தொடர்பாளர்கள் மறு அறிவிப்பு வரும் வரை எந்தவித கருத்தையும் ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம்"

ஆளும் அதிமுக-வின் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை, ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக-வின் மாவட்டச் செயலாளர்கள், மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

கட்சிக்குள் எழுந்த ‘ஒற்றைத் தலைமை' பிரச்னை குறித்து விவாதிக்கவே இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து அதிமுக சார்பில், கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள், ஊடகங்களில் கருத்து சொல்வது குறித்து புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி, “அதிமுக செய்தி தொடர்பாளர்கள் மறு அறிவிப்பு வரும் வரை எந்தவித கருத்தையும் ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம். கட்சி நிர்வாகிகளின் ஒப்புதலைப் பெற்ற கருத்துகளை மட்டுமே தெரிவிக்க செய்தித் தொடர்பாளர்களுக்கு உரிமையுண்டு.

தேர்தல் முடிந்த அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கியிருப்பதால் ஊடகங்களில் எந்தவித கருத்தையும் தெரிவிக்க வேண்டாம். மீறி கருத்து தெரிவிப்போர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது. 

சில நாட்களுக்கு முன்னர், அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, “அதிமுக-வுக்கு வலிமையான தலைமை தேவை. இப்போது அப்படிப்பட்ட தலைமை இல்லை. இரட்டைத் தலைமையால் கட்சிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவால் அதிகம் அடையாளம் காட்டப்பட்டவர் தலைமையை ஏற்க வேண்டும். நான் சொல்லும் கருத்து கட்சியின் உட்பூசல் குறித்தது அல்ல. கட்சியில் தற்போது பல நெருடல்கள் இருக்கின்றன. எனவே கட்சியைக் கட்டுக்கோப்பாக வழி நடத்திச் செல்ல வலிமையான ஒற்றைத் தலைமை வேண்டும்” என்று பேசி பரபரப்பைக் கிளப்பினார். அவரின் கருத்துக்கு கட்சிக்குள்ளேயே பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்நிலையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இப்படிப்பட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

.