இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் நாட்கள் 17.4 ஆக அதிகரிப்பு: சுகாதார அமைச்சகம்
ஹைலைட்ஸ்
- இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் நாட்கள் 17.4 ஆக அதிகரிப்பு
- நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 3,04,019 ஆக உயர்வு
- இந்தியாவிலே அதிகமாக மகாராஷ்டிராவில் 1,01,141 பேர் பாதிப்பு
New Delhi: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இரட்டிப்பாகும் நாட்கள், இரண்டு வாரங்களுக்கு முன்பு 15.4 நாட்களிலிருந்து நிலையில், தற்போது 17.4 நாட்களாக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. முதல் முறையாக ஒரே நாளில் 10,000க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் 25ம் தேதியன்று, ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட சமயத்தில், கொரோனா பாதிப்பு இரட்டிப்பு விகிதம் 3.4 நாட்கள் இருந்தது என்று சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அமைச்சரவை செயலாளர் காணெளி காட்சி மூலம் அனைத்து மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், சுகாதார மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு செயலாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, கொரோனா பாதிப்புகள் வளர்ந்து வரும் மையப்பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தவும், கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
அப்போது, கொரோனா இரட்டிப்பு விகிதம்/நேரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஊரடங்கு தொடக்கத்தில் 3.4 நாட்களில் இருந்து தற்போது 17.4 நாட்களாக அதிகரித்துள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை செயலாளருடனான சந்திப்பின் போது, கொரோனாவை திறம்பட நிர்வகிப்பதற்கான கட்டுப்பாடுகள், சோதனை மற்றும் தடமறிதல், சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், மருத்துவ மேலாண்மை மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில், வீடு வீடாகச் சென்று பரிசோதனை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுதும் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதி மற்றும் சுகாதார கட்டமைப்பு வசதியை அதிகரிக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இரட்டிப்பு விகிதத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை தவிர்த்து, நோயாளிகளின் மீட்பு வீதமும் சிறப்பாக மாறியுள்ளது.
"கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வருபவர்களின் விகிதமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, தற்போது இது 49.47 சதவீதமாக உள்ளது" என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களில் மொத்தம் 1,47,194 பேர் குணமடைந்துள்ளனர். 1,41,842 பேர் தீவிர மருத்துவ மேற்பார்வையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், மொத்தம் 6,166 நோயாளிகள் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர்.
தொடர்ந்து, இன்று காலை நிலவரப்படி நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 3,04,019 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலே அதிகமாக மகாராஷ்டிராவில் 1,01,141 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் 40,698 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனைத்தொடர்ந்து, 3வதாக டெல்லியில் 34,687 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 10 நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.