This Article is From Aug 09, 2018

ஏமனில் விமானத் தாக்குதல்- பள்ளிக்குழந்தைகள் பலி

ஏமனின் சாதா பகுதியில் குழந்தைகளின் பள்ளிப் பேருந்து ஒரு சந்தைப் பகுதி வழியாகக் கடந்து செல்லும் போது குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

ஏமனில் விமானத் தாக்குதல்- பள்ளிக்குழந்தைகள் பலி

வடக்கு ஏமன் பகுதியில் நடந்த விமானத் தாக்குதலால் குழந்தைகள் நிறைந்த பஸ் தாக்குதலுக்கு உள்ளானது. இதனால், 20-க்கும் அதிகமானோர் பலியாகியும் பலர் காயமடைந்தும் உள்ளனர். இதுகுறித்த அதிகாரபூர்வத் தகவலை ஏமனில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ளது.

ஏமனின் சாதா பகுதியில் குழந்தைகளின் பள்ளிப் பேருந்து ஒரு சந்தைப் பகுதி வழியாகக் கடந்து செல்லும் போது குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

“20-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். அதற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். குறிப்பாக 10 வயதுக்கும் கீழுள்ள குழந்தைகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்புகளை ஈடுசெய்ய தேவையான கூடுதல் நிவாரணங்களை அனுப்பி வருகிறோம்” என ஏமனில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் ஜோனஸ் ப்ரூவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

நாட்டின் தலைநகரில் இருந்து 230 கிமீ தொலைவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு படுகாயமடைந்த குழந்தைகள் அனைவரும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

குழந்தைகள் பலர் இஸ்லாமிய கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்த கல்விச் சுற்றுலாவுக்காக சென்று கொண்டிருக்கும் போதுதான் தாக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை செய்தித்தொடர்பாளர் யூசஃப் அல் ஹதாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிஎன்என் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், ‘அண்டை மாவடங்களிலும் இந்தத் தாக்குதல் தாக்கம் எதிரொலித்துள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து ஐநா சபை, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பல மனிதநேய கூட்டமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.