"இந்தியா, கடந்த 70 ஆண்டுகளில் அதன் ஜனநாயகத்தை மேலும் மேலும் வலுவாக்கியுள்ளது"
New Delhi: இன்று இந்தியாவில் ‘அரசியலமைப்புச் சட்ட தினம்' (Constitution Day) கொண்டாட்டபடுகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi), நாடாளுமன்றத்தில் சிறப்புரை ஆற்றினார்.
“அரசியல் சட்ட சாசனத்தின் இரண்டு மந்திரங்கள், ‘இந்தியர்களின் மாண்பு' மற்றும் ‘இந்தியர்களின் ஒற்றுமை'-யாகும். இன்றைய இந்தியாவின் நிலையை டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர் (BR Ambedkar) மட்டும் பார்த்திருந்தால், அவர்தான் மிகவும் மகிழ்ச்சியான மனிதராக இருந்திருப்பார். இந்தியா, கடந்த 70 ஆண்டுகளில் அதன் ஜனநாயகத்தை மேலும் மேலும் வலுவாக்கியுள்ளது,” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.
மேலும் அவர் மகாத்மா காந்தியை மேற்கோள் காட்டிப் பேசுகையில், “நாம் எல்லோரும் நமது கடமைகளை முழு வீச்சோடு செய்தால் மட்டுமே, நமது உரிமைகளை எதிர்பார்க்க முடியும் என்று காந்திஜி சொல்லியிருக்கிறார். அதை வைத்துப் பார்க்கும் போது, நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தன்னால் ஆன கடமைகளைச் செய்து நாட்டின் வளர்ச்சிக்கு உதவ முடியும்.
ஒவ்வொரு சொட்டு நீரையும் ஒரு குடிமகன் சேமிக்கிறான் என்றால், அவனது கடமையைச் செய்துள்ளான் என்று அர்த்தம். தடுப்பூசிகளை சரியான நேரத்தில் போட்டுக் கொள்கிறான் என்றால் அவனது கடமையைச் செய்கிறான். ஓட்டு போட்டால் அவனது கடமையைச் செய்கிறான். வரியை சரியாக கட்டினால் அவனது கடமையைச் செய்கிறான்,” என்று உரையாற்றினார்.
இந்தியா, தனது 5வது அரசியலமைப்புச் சட்ட தினத்தை இன்று கொண்டாடுகிறது. நாட்டின் முதல் சட்ட அமைச்சரும், அரசியல் சட்ட சாசனத்தை உருவாக்க பாடுபட்டவருமான டாக்டர். பி. ஆர். அம்பேத்கருக்கு நன்றி செலுத்தும் வகையில் இந்த தினம், கடந்த 5 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. 70 ஆண்டுகளுக்கு முன்னர் நவம்பர் 26 ஆம் தேதிதான், இந்தியாவின் சட்ட சாசனம் அமலுக்கு வந்தது.
இப்படி பிரதமர் மோடி, நாடாளுமன்றத்துக்கு உள்ளே உரையாற்றிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில்தான், சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ், நாடாளுமன்றத்துக்கு வெளியே, மகாராஷ்டிர அரசுக்கு எதிராக போராட்டம் செய்து வந்தது.
வீட்டுச் சிறையில் இருக்கும் ஜம்மூ காஷ்மீரின் முன்னாள் முதல்வர், மெஹ்பூபா முப்டியின் மகள் இல்திஜா முப்டி, “இந்திய சட்ட சாசனத்தின்படி பதவியேற்ற 3 முன்னாள் முதல்வர்கள், கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் சட்டத்துக்குப் புறம்பான வகையில் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் காலக்கட்டத்தில் வாழ்ந்து வருகிறோம். அதேபோல, எம்எல்ஏ-க்கள் சந்தையில் காய்கறி வாங்குவது போல வாங்கப்படுகின்றனர். அரசியலமைப்புச் சட்ட தின வாழ்த்துகள்,” என்று ட்வீட்டியுள்ளார்.